Mai 1, 2024

யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தை மாநகர சபையிடம் ஒப்படையுங்கள்!

யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தை தமிழ் மக்களிடமே வழங்க வேண்டுமென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய அரசின் நிதி உதவியில் யாழில் அமைக்கப்பட்ட கலாசார நிலையம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவித்துள்ளதாவது..

யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் தமிழ் மக்களுக்கென்று இந்தியாவால் வழங்கப்பட்டது. ஆகவே அதனை பராமரிப்பது கலாச்சார நிகழ்வுகளை நடாத்துவது என அனைத்தும் தமிழ் மக்களால் தான் இருக்க வேண்டும். அவர்கள் கையிலே முழுப் பொறுப்பும் இருக்க வேண்டும்.

இதைவிடுத்து மத்திய அரசாங்கம் அதற்கு ஒரு குழு அமைத்து தானே செயற்படுத்துவது அல்லது வைத்திருப்பது முறையானது அல்ல. அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

இந்த மத்திய நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கும் பொழுது நான் முதலமைச்சராக இருந்தேன். அப்பொழுது இது மாகாண சபைக்கு வருமென்று தான் எதிர்பார்த்திருந்தோம். இப்பொழுது மாகாண சபை வலுவில் இல்லாத போது அது மாநகர சபைக்காவது கொடுக்க வேண்டும். 

அதேவேளை ஜந்து வருட காலத்திற்கு அதற்குரிய செலவுகளை தருவதாக இந்தியா கூறியிருப்பதால் எங்களுடைய மாநகர சபையே இதை கொண்டு நடத்தலாம் என்று நம்புகிறேன்.

இது எந்தவிதத்திலும் தமிழ் மக்களின் கைகளில் இருந்து மத்திய அரசாங்கத்திற்கு போவதை நான் விரும்பவில்லை. அவ்வாறான செயற்பாடுகளை கண்டிக்கிறேன்.இதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுப்பார் என்று நம்புகிறேன்.

எனினும் இந்த விடயத்தை முழுமையாக பரிசீலித்துப் பார்த்து தமிழ் மக்கள் தங்களுடைய கலாசார மண்டபத்தை தாங்களே பாவிக்க கூடிய வகையிலும் பராமரிக்கும் கூடியதான சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டுமென்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.-

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert