Mai 3, 2024

எனக்கு ஏற்பட்ட அதே நிலை கோட்டாபயவுக்கும் ஏற்படும்! மைத்திரி…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தின் பலம் கிடைக்காது போனால், நாட்டில் பல நெருக்கடிகள் ஏற்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

ஆறு மாதங்களுக்கு முன்னர் நாட்டு மக்கள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்தனர். கோட்டாபய ராஜபக்சவை பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.

நாடாளுமன்றத்தின் பலம் தற்போதைய ஜனாதிபதிக்கு கிடைக்காது வேறு தரப்புக்கு சென்றால் நாட்டில் என்ன நடக்கும்?. நாடு பெரிய நெருக்கடியை நோக்கி செல்லும். இதில் சிறந்த அனுபவம் எனக்குள்ளது.

நாடாளுமன்றத்தில் பலமின்றியே சுமார் 5 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த அரச தலைவர் என்ற வகையில் எனக்கு அனுபவம் இருக்கின்றது.

எனது அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் அமைச்சரவையில் எனக்கு பெரும்பான்மை இருக்கவில்லை.

இந்த நிலைமையில் நாடு பின்நோக்கி சென்ற பல சம்பவங்கள் நடக்க காரணமாக அமைந்தது. மோதல்கள் ஏற்பட்டன.

நாட்டில் தற்போதுள்ள மக்களுக்கும் நாளை பிறக்க போகும் குழந்தைகளுக்காகவும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

அரசாங்கம் யாருடையது என்பது இங்கு பிரச்சினையல்ல. எந்த நிறம் என்பதும் பிரச்சினையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.