Mai 2, 2024

அரசியல் கைதிகளில் ஒருவரையாவது உங்களால் விடுவிக்க முடிந்ததா?: சுமந்திரனிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி!

அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, அபிவிருத்தி தொடர்பான விடயங்களை ஏ.எம்.சுமந்திரன் இப்போது பேசியிருக்கிறார். கைதிகள் விடுவிப்பு தொடர்பில் நான் ஏ.எம்.சுமந்திரனிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன். கைதிகள் சில பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். சிலர் நீதிமன்றங்களில் பிரகாரம் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். சிலருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிலருடைய வழக்குகள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆகவே, அரசியல் கைதிகளில் யாராவது ஒருவரையாவது நாடாளுமன்றத்தின் ஊடாகவோ அல்லது ஜனாதிபதி, பிரதமர் ஊடாகவோ பேசி, அந்தப் பேச்சுவார்த்தையூடாக இத்தனை அரசியல் கைதிகளை விடுவிக்கின்றோம் என்ற முடிவுக்கு வந்து எந்த ஒரு அரசியல் கைதியாவது விடுவிக்கப்பட்டாரா? எனத் தமிழ்மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று(12) நண்பகல் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டத்தரணிகளின் முயற்சியின் ஊடாக சிலர் பிணையில் விடுவிக்கப்படுவதும், சிலர் குற்றவாளிகளாக காணப்பட்டதும் தான் நடந்து முடிந்திருக்கின்றதே தவிர சுமந்திரன் கூறுவது போல் தமிழ்த்தேசியக்  கூட்டமைப்பாலோ அல்லது அதன் தலைமைத்துவத்தாலோ விடுவிக்கப்பட்டார்கள் என்ற விடயம் நடந்ததாக இல்லை.

அரசியல் கைதிகளுக்காக சில விடயங்களை சாதித்தோம் என சுமந்திரன் ஊடங்களின் முன் நின்று பொய் கூறுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம். இதே போன்று தான் காணி விடுவிப்பும்.

வடக்கு மாகாணத்தில் எத்தனை ஏக்கர் காணிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முயற்சியால் விடுவிக்கப்பட்டது? என்பதை ஏ.எம்.சுமந்திரன் தெளிவுபடுத்த வேண்டும். இன்னும் ஆயிரக்கணக்காக ஏக்கர் காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதுதான் யதார்த்தம்.

அரசுடன் ஆதரவாகவிருந்து செயற்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ன விடயங்களைச் சாதித்துள்ளீர்கள்? என்பதைக் கூற வேண்டும்.

புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டுவர முடியாமலும், அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாமலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எந்த தீர்வுமில்லாத நிலையில், நிலங்களை முழுமையாக விடுவிக்காத நிலையில் அரசிடமிருந்து சில கோடிகளைப் பெற்றுக் கொண்டு வீதிகளைப் போட்டோம், கிணறுகளைத் திருத்தினோம், கோவில்களைக் கட்டினோம் என்று சொல்வது கூட்டமைப்பால் மாத்திரம் தான் முடியும்.

எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்தது. அரசுடன் இணைந்திருந்த ஐந்து வருடத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய எந்த அபிவிருத்தி வடக்கில் செய்யப்பட்டது?

தேர்தலுக்காக முழுமையாகத் தமிழ்மக்களை ஏமாற்றக்கூடிய வகையில் அவருடைய கட்சியிலிருக்கின்றவர்களால் கண்டிக்கக் கூடிய விதத்தில் தொடர்ந்தும் கூச்சமில்லாமல் பொய் பேசி வருவது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம். இதனைத் தமிழ்மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.