Mai 6, 2024

தமிழின அழிப்பு அறிவியற் கிழமைக்கான சட்டவரைபை நிறைவேற்றும் கடும் முயற்சியில் விஜய் தணிகாசலம்..!!

ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத்தில் தமிழினப்படுகொலை பற்றிய அறிவியற் கிழமை ஒன்றை சட்டமூலம் ஆக்குவதற்கான பிரேரணை கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்களில் பெரும் தொகையாக வாழ்ந்து வரும் இடமாக ஒன்ராறியோ விளங்குகின்றது.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசினால் நடாத்தப்பட்ட இனப்படுகொலையானது தமிழ் சமூகத்தை ஆழமாக பாதித்துள்ளது. சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இவ் இனவழிப்பு நடைபெற்று 11 ஆண்டுகள் நெருங்கி வரும் நிலையில் தமிழினப்படுகொலையை அங்கீகரிக்க கோருவது மிக முக்கியமானதாகும்.

இன்றைய உலகை மாற்றுவதில் கல்வி மிக முக்கியமான ஒன்றாகப் பயன்பட்டு வருகின்றது. இவ்வகையில் தமிழினப்படுகொலையை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், தமிழினப்படுகொலை உட்பட உலகில் நடைபெற்ற பிற இனங்கள் மீதான படுகொலைகள் பற்றிய விழிப்புணர்வைத் தக்கவைப்பதற்கான எமது கூட்டு விருப்பத்தை உறுதிப்படுத்தும் எனவும் நம்புகின்றோம்.

இப்பிரேரணையானது பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது.

1. இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டது இனப்படுகொலை என்பதனை அங்கீகரித்தல்

2. ஒவ்வொரு வருடமும் மே 18 ம் திகதியில் முடிவடையும் முதல் ஏழு நாட்கள் கொண்ட வாரத்தினை தமிழின அழிப்பு அறிவியற் கிழமையாக பிரகடனப்படுத்தப்படல்.

என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது, ஒண்டாரியோ சட்ட மன்றத்தில் 104 சட்டவரைபை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் முகமாக இலங்கை அரசாங்கமும் மற்றும் இலங்கை அரசாங்கத்தால் சம்பளத்துக்கு அமர்த்தப்பட்ட ஒரு பகுதியினரும் கடும் பிரயத்தனம் எடுத்துவருகின்ற அதேவேளை சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தொடர்பாக இலங்கை அரசு கடும் அதிருப்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்ட வரைபை நிறைவேற்றுவதற்கு எமது சமூகத்தின் ஆதரவை வேண்டி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்,அந்த அறிக்கையில்

ஒண்டாரியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்கள் கடந்த ஆண்டு தமிழின அழிப்பு அறிவியற் கிழமைக்கான சட்டவரைபு – 104ஐ முன்மொழிந்திருந்தார். மேற்படி வரைபு -104 ஆனாது, மே 12 முதல் மே 18 வரையான ஒரு வார காலத்தை தமிழ் இன அழிப்புத் தொடர்பான அறிவியற் கிழமையாகப் பிரகடனப்படுத்துகின்றது. இவ்வரைவு, தமிழ் இனத்துக்கு எதிராக அட்டூழியங்கள் நடைபெற்றன என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வதை உறுதி செய்யும்.

இதனை நாம் செய்வதன் மூலம், இறந்தவர்களுக்கு நாம் மதிப்பளிப்பதற்கும், துன்பங்களை அனுபவிப்பவர்களுக்கு நம்பிக்கையினை ஊட்டவும், அவர்களைப் பாதிப்புகளிலிருந்து வெளிக்கொண்டுவரவும் உதவியாக இருக்கும்.
தற்போது இவ்வரைபு ஒழுங்கு விதிகள் மற்றும் தனிநபர் மசோதா தொடர்பான மானில சட்டமன்றக் குழுவில் உள்ளது. இச்சட்ட வரைபை வெற்றிகரமாக நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதற்கு எமது சமுகத்தின் ஆதரவு தேவைப்படுகின்றது.பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழ் இன அழிப்பிலிருந்து தப்பியவர்களின் கதைகளையும் வாக்குமூலங்களையும் நாம் தற்போது சேகரித்து வருகிறோம்.

இச்சட்டவரைபுக்கு வலுச் சேர்ப்பதற்கென எமது சமுகத்திலிருந்து அனைவரும் முன்வந்து இன அழிப்பு தொடர்பான தமது நேரடி அனுபவங்களையும் சாட்சியங்களையும் தெரியப்படுத்த வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.இதுபற்றி நீங்கள் மேலும் அறிந்துகொள்ள விரும்பினாலோ அல்லது இதற்கு நீங்கள் எவ்வகையிலாவது வலுச் சேர்க்க விரும்பினாலோ, vijay.thanigasalam@pc.ola.org என்ற மின்னஞ்சல் மூலமாக, அல்லது 416 283 8448 என்ற தொலைபேசி மூலமாக எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர்.
ஸ்காபரோ – றூஜ் பார்க்.