Mai 8, 2024

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? இ.தொ.கா உப தலைவர் புகழாரம்… முக்கிய செய்தி

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? துணிச்சல், கம்பீரம், விவேகம், வீரம், சாணக்கியம் என்ற அடையாளங்களைக் கொண்ட அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வாரிசான ஜீவனுக்கு தகப்பனின் அடையாளங்கள் இயற்கையாகவே இருக்கச் செய்யும்.

அந்த அடையாளங்கள் குறித்து எவரும் அவருக்கு கற்பிக்கத் தேவையில்லை என முன்னாள் பதுளை மாவட்ட எம்.பி.யும்., இ.தொ.கா உப தலைவருமான டி.வி. சென்னன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடகச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“எனது தந்தையார் மறைந்து விட்டாரென்று இருள் சூழ்ந்துவிட்டதென்று எவரும் ஏக்கத்துடனும், நம்பிக்கையீனத்துடனும் இருக்க வேண்டிய அவசியமில்லை.

இருள் நீங்கிவிடும். சேவல் கூவும், உதய சூரியன் உதயமாகும். நான் இருக்கின்றேன் அச்சம் வேண்டாம். எனது தந்தையார் அவரது வாழ்க்கையை மலையக மக்களுக்காக அர்ப்பணித்தாரோ, அதைப் போன்று எனது வாழ்க்கையையும் எமது மக்களுக்காக அர்ப்பணிப்பேனென்று துயரத்தின் மத்தியிலும் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த எமது மக்களுக்கு நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர் அவரது பேரனான ஆறுமுகன் தொண்டமான் எவ்வகையில் இ.தொ.கா. வை வழிநடாத்தினாரோ, அதைவிட பாரிய சேவைகளை ஜீவன் தொண்டமான் மேற்கொள்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் வேட்பு மனுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜீவன் தொண்டமானின் பெயர் உள்ளடக்கப்பட்டது போன்று, இ.தொ.காவின் தலைமைப் பீடத்தையும் அவரிடம் ஒப்படைப்பதே காலத்தின் தேவையாகும். இதனையே மலையகப் பெருந்தோட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்” என்றார்.