அதிநவீன நீர்மூழ்கி ஏவுகணை வெற்றிகரமாக சோதித்தது ரஷ்யா
ரஷியாவில் கடலில் உள்ள இலக்கை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.ரஷிய பசிபிக் கடற்படையின் ‘மார்ஷல் ஷபோஷ்னிகோவ் போர்க்கப்பல்’, கடலில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் அதிநவீன நீர்மூழ்கி ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. ஜப்பான் கடல் நடுவே இந்த சோதனை நடைபெற்றது.
இந்த ஏவுகணை கடலுக்கு உள்ளே பல மைல் தூரத்தில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிக் கப்பலை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
இதற்காக ரஷிய கடற்படை சார்பில் நீர்மூழ்கி கப்பலில், நீர்மூழ்கி வளாகம் ஒன்று கட்டமைக்கப்பட்டது என்ற தகவலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஷிய பாதுகாப்புத்துறை தெரிவித்திருந்தது.
புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கி வளாகத்திலிருக்கும் ‘இஸட் எஸ்-14’ ஏவுதளத்தில் இருந்து இந்த அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை ஏவப்பட்டது.
இந்த ஏவுகணை இலக்கின் அருகே சென்றடைந்ததும் இன்னொரு சிறிய தானியங்கி நீர்மூழ்கி ஏவுகணையை ஒரு பாராசூட்டில் வெளியேற்றும்.அந்த ‘பாராசூட் ஏவுகணை’ எதிரிகளின் நீர்மூழ்கி கப்பலை சோனார் தொழில்நுட்பம் மூலமாக துல்லியமாக கண்டறிந்து தாக்கும்.
இந்த ஏவுகணை 40 கிமீ சுற்றளவு தூரத்துக்கு இலக்கை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டது.
இந்த தகவலை ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.