November 23, 2024

பாழாய் போன அரசியல்:குருபரன்

அறுதிப் பெரும்பான்மை (simple majority) பெறத் தவறியிருந்தாலும் அதிக ஆசனங்கள் பெற்ற கட்சியை (single largest party) குறித்த உள்ளூராட்சி சபையை நிர்வகிக்க விட வேண்டும் என்று நான் 2018இல் பகிரங்கமாகவே கூறியிருந்தேன். அப்படி செய்திருந்தால் நல்லூர் பிரதேச, பருத்தித்துறை நகர, சாவகச்சேரி நகர சபைகள் முன்னணியிடமும் ஏனையவை கூட்டமைப்பின் நிர்வாகத்திலும் இருந்திருக்கும். எல்லாம் தமக்கு வேண்டும் என்ற மமதையில் கூட்டமைப்பு செயற்பட்டது அன்று. முன்னணியின் தலைமை ஏற்ற போதும் முன்னணியிலும் சிலர் இந்த போர்முலாவை ஏற்க முன்வரவில்லை என தெரிவித்துள்ளார் சட்டத்தரணி குருபரன்.

தற்போது இலண்டனில் அடைக்கலம் புகுந்துள்ள அவர் கருத்து தெரிவிக்கையில் இன்று நடந்து முடிந்திருப்பது அவரவரின் தனிப்பட்ட அரசியல் காய் நகர்த்தல்கள். இதில் மக்கள் நலன் மாத்திரம் தான் இருந்தது என்று சொல்வதெல்லாம் பொய். உள்ளூராட்சி சபை என்பது மக்களின் நாளாந்த சேவைகளை பெற்றுக் கொடுக்கும் ஒரு சேவை வழங்குநர் மாத்திரம் அல்ல அது மக்களோடு நாளாந்தம் தொடர்புக்கு வரும் ஓர் சனநாயக அமைப்பு. அதில் என்ன செய்கின்றோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு எமது அரசியல் செய்கையூடாக நாம் மக்களுக்கு எந்த அரசியல் அறம் முக்கியமானது என்பதை உணர்த்துகிறோம் என்பதும் முக்கியம். அறம் முக்கியமில்லை சாணக்கியம் தான் முக்கியம் அதிகாரம் தான் முக்கியம் என்றால் எதற்கான சாணக்கியம் என்று நாம் கூட்டமைப்பிடம் மீண்டும் மீண்டும் கேட்டதை மறந்துவிடாதீர்கள். இவ்வளவு நாள் இதை அறிந்து வைத்தவர்கள் என்று நாம் எண்ணியவர்களிடமே இதை மீள ஞாபகப்படுத்த வேண்டியிருப்பது காலக் கொடுமை. துன்பத்திலும் துன்பம்.

இருக்கட்டும். நல்ல நிர்வாகத்தைத் தரட்டும். ஆள வாய்ப்பளித்தால் எம்மாலும் ஆள முடியும் என்பதை நிரூபிக்கட்டும். தான் அறம் பிழைத்தவன் இல்லை என்பதை நிரூபிக்கவும் வாய்ப்பு வழங்குவோம். வேற என்ன செய்யிறது.