Juni 1, 2024

தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் – ஊடக அறிக்கை18.05.2024

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய எமது மக்களே!

இன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15 வது ஆண்டு நினைவு நாள்.

21 ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்தின் பாதுகாப்பு மேலோங்கிய போதிலும் மானிட அறம் முள்ளிவாய்க்கால் மண்ணில் புதையுண்டு இன்று 15 ஆண்டுகளை கடக்கின்றது.

பன்னாட்டு போரியல் சட்ட நியதிகள் மீறப்பட்டு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாலும் கொத்துக் குண்டுகளாலும் குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் உள்ளடங்கலாக எமது மக்கள் சித்திரவதைகளின் மத்தியில் கொடுரமாக இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற சத்தியத்தை இன்று பன்னாட்டு சமூகம் விளங்கியிருக்கின்றது.

பல்வேறு தடைகளுக்கு மத்தியில் தமிழர் தாயகம் மாத்திரமன்றி புலம்பெயர் நாடுகளிலும் கடந்த 15 ஆண்டுகளாக தமிழினப்படுகொலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படுகின்ற நினைவேந்தல்களையும் , ஆவணப்படுத்தல்களையும் அதற்காக எமது மக்கள் செய்யும் அர்ப்பணிப்புக்களையும் ஆழமாக மதிக்கின்றோம்.

இனப்படுகொலை என்பது மனிதப்படுகொலைகள் மாத்திரமல்ல மாறாக இனத்தின் கட்டுமானங்களான மொழி,நிலம், பண்பாடு, வரலாறு , போன்ற ஆதாரங்களில் ஏற்படுகின்ற தொடர்ச்சியான அழிப்புக்களையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

தமிழர்களுக்கெதிரான மனிதப்படுகொலைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் இனவழிப்பு தொடர்ந்தவண்ணமே இருக்கின்றது என்ற உண்மையில் மக்கள் தெளிவடைய வேண்டுகின்றோம்

இழப்பதற்கு எமது மக்களிடம் எதுவும் இல்லை என்ற நிலையில் அரசியல் பலத்தை ஓரணியில் திரட்சியாக்க வேண்டிய தேவை எமக்கு முன்னால் பெரும் சவாலாகவும் பொறுப்புமிகு கடமையாகவும் உள்ளது.

எமது அரசியல் சக்தியை அதிகரிப்பதற்கு வேறு வழியின்றி எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதாக சிவில் சமூகத்தினர்களின் கூட்டு முயற்சிகளுக்கு நாங்கள் எமது மக்களின் நலனை முன்நிறுத்தி எமது ஆதரவை வழங்கியிருக்கின்றோம்.

எமது மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு நாளில் ஓரணியில் திரண்டு தேசமாக படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரும் அதேவேளை எமது அரசியல் பலத்தை அதிகரித்து தேசதிரட்சியினை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து எமது மக்களின் அரசியல் வெற்றியினை உறுதிப்படுத்துமாறு தாயக மற்றும் புலம்பெயர் எமது மக்களுக்கு நாம் அழைப்புவிடுக்கின்றோம்.

„ஒன்று பட்டு உரிமையை வெல்வோம்“

திரு.ஜீவரெத்தினம் தவேஸ்வரன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்-
தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert