Mai 5, 2024

சர்வதேச எதிர்ப்புக்கு மத்தியில் தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன்.

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மலேசியத் தமிழ் இளைஞர் தூக்கிலிடப்பட்டார் என்பதை உறவினர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற அந்த நபர் 2009ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து43 கிராம் ஹெரோயின் போதைப் பொருளைத் தனது தொடை இடுக்கில் மறைத்து எடுத்து வந்த வேளை சிங்கப்பூர் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

உலகிலேயே மிக இறுக்கமானசிங்கப்பூரின் போதைப் பொருள் தடுப்புச்சட்டங்கள் 15 கிராமுக்கு மேற்பட்ட அளவிலான ஹெரோயின் கடத்தலுக்கு மரணதண்டனையை வழங்க அதிகாரமளிக்கிறது.

நாகேந்திரன் மீதான குற்ற விசாரணைகள் கடந்த ஒரு தசாப்த காலமாக நீடித்தன. 34 வயதான அவர் வற்புறுத்தலின் பேரிலேயே ஹெரோயின் கடத்தலைச் செய்ததாக முதலிலும் பின்னர் பணத்தேவைக்காகவே அதனைச் செய்தார் என்றும் முரண்பாடான வாக்குமூலங்களை வழங்கியிருந்தார்.

அவரது முதல்கூற்று குற்றத்தை மறைப்பதற்காகச் சோடிக்கப்பட்ட ஒன்று என்றும் தான் என்ன செய்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டே குற்றம் புரிந்துள்ளார் என்றும் கண்டறிந்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில் அவரைப் பரிசோதித்தமருத்துவ நிபுணர் ஒருவர், நாகேந்திரன் IQ 69 எனப்படுகின்ற’புத்திக் கூர்மை அல்லது அறிவு சார்ந்த குறைபாடுடையவர்’ என்பதைக் கண்டறிந்தார். அதனால்அவரது வழக்கு விவகாரம் சர்வதேச மட்டத்தில் பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியிருந்தது.

அறிவுசார் குறைபாடு( intellectual disability) கொண்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்கள் வெடித்தன. ஐரோப்பிய ஒன்றியமும் மரண தண்டனைக்கு எதிரான உலக இயக்கங்களும் நாகேந்திரனைத் தூக்கிலிட வேண்டாம் என்று சிங்கப்பூர் அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தன.

ஆனால் தான் செய்தது சரியா தவறா என்பதைச் சரியாக உணர்ந்து கொள்ளக்கூடிய புத்தி உணர்வு நிலையிலேயே அவர் இருந்தார்” – என்று சிங்கப்பூர் அரசு அடித்துக் கூறியிருந்தது. மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்குமாறு செய்யப்பட்ட பல மேன்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன.

கடைசியாக நாகேந்திரனின் தாயார் கருணை காட்டக் கோரிச் செய்த முறையீடும் நேற்று நிராகரிக்கப்பட்டதை அடுத்தே சட்ட விதிமுறைகளின் படி அவர் தூக்கிலிடப்பட்டார்.

சிங்கப்பூரின் சாங்கி சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவரது உடலை மலேசியாவுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடாகியுள்ளது. நீதிமன்றில் அவரது குடும்பத்தினர் அவரது கைகளை பற்றி இறுதி விடை கொடுத்த சமயத்தில் நாகேந்திரன் “அம்மா” என்று கதறினார் என “ரொய்ட்டர்” செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert