September 21, 2024

மனித உரிமைப் பேரவையின் 46 வது கூட்டத்தொடரில் Lawyers’ Rights Watch Canada சார்பில் ஹரினி சிவலிங்கம் உரையாற்றினார்.

ஜெனிவாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 வது கூட்டத்தொடரில், சிறப்பு ஆலோசனைத் தகுதியுள்ள Lawyers’ Rights Watch Canada (LRWC) அமைப்பின் சட்டத்தரணி ஹரினி சிவலிங்கம் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் எழுத்து வடிவம் கீழே காணப்படுகின்றது

பேரவைத் தலைவி அவர்களே,

Lawyers’ Rights Watch Canada (LRWC) இலங்கை தொடர்பான அறிக்கைக்காக உயர் ஆணையாளருக்கு நன்றி தெரிவிக்கிறது. இலங்கையில் நிலவும் குற்றம்புரிந்தோர் தண்டிக்கப்படாத நிலைமையைப் பேரவை உடனடியாகக் கருத்திற் கொள்ளவேண்டுமென்ற கரிசனையை நாமும் கொண்டுள்ளோம். தமிழ் மக்கள் மீது முன்னர் புரியப்பட்ட சட்டவிரோதமான கொலைகள், ஆள்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, தான் தோன்றித்தனமான தடுத்து வைத்தல், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளடங்கலான மீறல்கள் தொடர்பாகப் பொறுப்புக் கூறப்படாதமையும், இந்தப் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டமையும், இவை மீள இடம்பெறும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கின்றன.

மனித உரிமைப் பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோரின் குரல்களை மௌனிக்கச் செய்யும் நோக்கத்துடன் இடம்பெறும் கட்டமைக்கப்பட்ட வகையான கண்காணிப்பு, தொந்தரவு மற்றும் மிரட்டல் என்பன எமக்குக் கவலையை ஏற்படுத்துகின்றன. அரசு – போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதை ஒடுக்குவதும், ஆர்ப்பாட்டங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதும், இராணுவ மயமாக்கப்பட்ட கோவிட்-19 ஒழுங்கமைப்பின் கீழ் முஸ்லிம் மற்றும் ஏனைய சிறுபான்மையினரின் உடல்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்படுவதும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தும் போக்குகளாக அமைகின்றன. இலங்கை தவறான பாதையில் செல்வதையும், நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான எந்த உள்நாட்டுப் பொறிமுறையும் வெற்றியளிக்கப் போவதில்லையென்பதையும் அறிகுறிகள் தெளிவாகக் காட்டுகின்றன. மனித உரிமை நிலைமை மேலும் சீர்குலைந்து செல்வதைத் தடுப்பதற்குச் சர்வதேச தலையீடு அவசரமாகத் தேவைப்படுகிறது.

நாம் பேரவையிடம் பின்வரும் ஆசேனைகளைச் சமர்ப்பிக்கின்றோம்.

  1. இலங்கை மீதான கண்காணிப்பைப் பலப்படுத்துமாறும், சர்வதேச மட்டத்தில் பொறுப்புக் கூறலுக்கான வழிகளைச் செய்வதற்கான ஒரு சீரான, செயற்திறனுள்ள, நேரக் கட்டுப்பாட்டைக் கொண்டது திட்டத்தை முன்வைக்குமாறும்;
  2. இலங்கை நிலைவரத்தைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பரிந்துரை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும்;
  3. உறுப்பு நாடுகள் இலங்கையில் புரியப்பட்ட சர்வதேச குற்றங்களுக்கு சர்வதேச நியாயாதிக்கக் கோட்பாட்டைப் பயன்படுத்தி அவற்றின் தேசிய நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஊக்குவிப்பதுடன், இலங்கையில் பாரதூரமான மீறல்களைப் புரிந்ததாக அடையாளம் காணப்பட்டவர்கள் மீது பயணத் தடைகள், சொத்துக்களை உறைநிலையில் வைத்தல் போன்ற தண்டனைகளை விதிக்குமாறும் கோருகிறோம். மேற்கண்டவாறு அவரது உரை அமைந்திருந்தது