Mai 9, 2024

ஜநா ஆணையாளரது நற்சான்றிதழ் கேலிக்குரியது!

 

காணாமல் போனோர் அலுவலகத்தை தமிழ் மக்கள்  முற்றாக நிராகரித்துள்ள நிலையில் ஜநா ஆணையாளர் அதற்கு சாதனைகள் புரிந்துள்ளதாக வழங்கியுள்ள நற்சான்றிதழ் கேலிக்குரியதென வடக்கு கிழக்கு வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சங்கப்பிரதிநிதிகள் கருத்து வெளியிடுகையிலேயே இதனை தெரிவித்துள்ளனர்.

மட்டுப்படுத்தப்பட்ட திறன் மற்றும் வளங்கள் இருந்தபோதிலும், காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் குரல்களையும் அவற்றின் நிலைமையையும் அதிகரிக்க காணாமல் போனோர் அலுவலகம் உதவியது. குடும்பங்களுக்கு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான சான்றிதழ்களைப் பெற காணாமல் போனோர் அலுவலகம் உதவியுள்ளது, குறிப்பாக ஒவ்வொரு வழக்கிலும் “இடைக்கால அறிக்கைகள்” வழங்குவதன் மூலம். மனித எச்சங்களை விசாரித்தல் மற்றும் வெகுஜன புதைகுழிகளை அகற்றுவது தொடர்பான மாஜிஸ்திரேட் நீதிமன்ற வழக்குகளில் இது ஒரு பார்வையாளர் பங்கைக் கொண்டுள்ளது. வழக்குகளின் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்க காணாமல் போனோர் அலுவலகத்தால் கடந்த விசாரணைக் கமிசன்களின் பதிவுகளையும் அணுக முடிந்தது, மேலும் 2020 நவம்பரில், அது பதிவுசெய்த காணாமல் போன மற்றும் காணாமல் போன நபர்களின் புகார்களின் பட்டியலை வெளியிட்டதென ஜநா ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதனையே கேலிக்குரியதென தெரிவித்துள்ள சங்கம் முற்றாக எம்மால் நிராகரிக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தை நியாயப்படுத்த வேண்டாமெவும் ஜநாவை கோரியுள்ளது.

அதேபோன்றே கோத்தபாயவினால் அமைக்கப்பட்டுள்ள மற்றொரு கமிசனை கேள்விக்குள்ளாக்கிய அவர்கள் ஏற்கனவே கடந்த 10வருடங்களில் தாங்கள் 12 கமிசன்களை கண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் இந்த கமிசன்களால் எந்தவொரு பலனும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களிற்கு கிட்டவில்லை.அந்த கமிசன்களது அறிக்கைகள் எங்கிருக்கின்றதெனவும் தெரியவில்லை.

அவ்வகையில் கோத்தபாயவின் புதிய கமிசன் காலத்தை இழுத்தடிக்கும் சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகமெனவும் தெரிவித்தனர்.