April 26, 2024

ஈரானுக்கு தோள் கொடுத்த சீனா…!!

சீனாவும் ஈரானும் ஒன்று சேர்வதால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு ஏற்படலாமென அரசியல் அறிஞர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா பரவலுக்கு பின்னர் சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ஈரானும் சீனாவும் ஒன்று சேர்ந்துள்ளன.

இதுவரை மென்மையான போக்கை தங்களிடம் கடைபிடித்து வந்த அமெரிக்கா எதிரியாக நினைத்து பாய காத்திருப்பதை சீனா அமைதியாகவே வேடிக்கை பார்க்கவில்லை.

அமெரிக்காவிற்கு பிடிக்காத ஈரான், வடகொரியா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் நல்ல நட்பு பாராட்டி வருகிறது. இந்த சூழலில் எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடியாக களம் பதித்து ஈரானுக்கு தற்போது தோள்கொடுக்கவும் முடிவு செய்துள்ளது.

ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையே விரைவில் இதற்கான ஒப்பந்தம் போடப்பட உள்ளது.

இதன்படி அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஈரான் குறைந்த விலையில் சீனாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும். இதற்கு பதிலாக எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் 280 பில்லியன் டொலர்கள் முதலீடும், உற்பத்தி மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்பில் 120 பில்லியன் டொலர்கள் முதலீடும் சீனா செய்ய உள்ளது.

இதேவேளை இரு நாடுகளும் கூட்டு இராணுவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிகள், ஆயுத தயாரிப்பு, உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்தல் போன்றவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன.

சீனாவின் கனவுத்திட்டமான பட்டுப்பாதை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த ஈரான் உதவும் என்பதால் கிட்டத்தட்ட சீனாவிற்கு மிகப்பெரிய இலாபமாக மாறிவிடும்.

ஏற்கனவே இந்தியாவின் அண்டை நாடுகளாக நேபாளம், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளை சீனா தன்வசம் வைத்திருப்பதால் இனி நினைத்ததை சாதிக்க முடியும்.

சீனா இந்தியாவையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர விரும்புகிறது. ஆனால் வலிமையான பொருளாதார சக்தியான இந்தியா இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.