Mai 20, 2024

திருகோணமலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம்!

அமைக்கப்படவுள்ள விகாரைக்கு எதிராக போராட்டம். திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்று திருகோணமலை, சாம்பல்தீவு பாலத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது.

இலுப்பைக்குளம், பெரியகுள சந்திக்கு அண்மையில் அமைக்க திட்டமிடப்பட்டு வருகின்ற விகாரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த விகாரை எதற்கு?”, “பெரியகுளம் விகாரை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்து”, “தொல்லியல் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டுமா?”, “தொல்லியல் திணைக்களமே இனவாதத்தை தூண்டாதே” என்ற வாசகங்களை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அமைக்கப்படவுள்ள விகாரைக்கு எதிராக குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உட்பட பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்

குறித்த ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் முகமாக திருகோணமலை – நிலாவெளி பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் திருகோணமலை நீதிவான் நிதிமன்றினால் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு 14 பேருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிட்ட தக்கது. இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நிலாவெளி பொலிசாரினால் குறித்த தடையுத்தரவு வாசித்துக்காட்டியதையடுத்து திருகோணமலை – நிலாவெளி வீதியின் சாம்பல்தீவு சந்திப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சாம்பல்தீவு பாலத்திற்கு அப்பால் சென்று தமது எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தார்கள்.
திருகோணமலை இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்ணளவாக 540 குடும்பங்களைச் சேர்ந்த 2202 தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அத்துடன் இதனைச் சூழவுள்ள பெரியகுளம், ஆத்திமோட்டை, சாம்பல்தீவு மற்றும் சல்லி போன்ற கிராமங்களில் தமிழர்கள் மட்டுமே காலாகாலமாக வாழ்ந்து வருகின்றார்கள். சிங்கள பௌத்தர்கள் இல்லாத இப்பிரதேசத்தில் பௌத்த விகாரை நிறுவப்படுமானால் அது மூவின மக்களினதும் ஒற்றுமையை சீர்குலைத்து இன வன்முறைக்கும் வித்திடும் என மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றார்கள். திருமலை நிருபர் சூரியா

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert