தையிட்டியில் பொலிஸ் தடைகளை மீறி சுமந்திரன், மாவை உள்ளிட்டோர் உள்நுழைவு!

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரையை அகற்ற கோரி பொலிஸ் முற்றுகைக்குள் போராட்டம் நடாத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் நேரில் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்து , கலந்துரையாடினர்.

விகாரையை அகற்ற கோரி நேற்றைய தினம் புதன்கிழமை முதல் நாளைய தினம் வெள்ளிக்கிழமை வரையில் விகாரை முன்பாக தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கும் நோக்குடன் நாடாளுமன்ற உறுப்பினர் செ கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அந்நிலையில் நேற்றைய தினம் இரவு அவ்விடத்தற்கு வந்த பொலிஸார் , போராட்டக்காரர்களின் கொட்டகையை அங்கிருந்து பிடுங்கி , அகற்றினர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இங்கிருந்து விலகி செல்ல வேண்டும் . இல்லையெனில் அனைவரையும் கைது செய்வோம் என கூறி பலரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதேவேளை வீதிகளில் தடைகளை ஏற்படுத்தி , போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வேறு எவரும் செல்ல முடியாதவாறு தடைகளை ஏற்படுத்தினார்.

பொலிஸாரின் மிரட்டல்களை செவி சாய்க்காது நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கான உணவு , நீர் மற்றும் மருந்து ஆகியவற்றை வழங்கவும் பொலிஸார் அனுமதிக்கதாக நிலையில் சுமார் 7 மணி நேரத்தின் பின்னர் மனிதவுரிமை ஆணைக்குழு உள்ளிட்டவர்களின் அழுத்தங்கள் காரணமாக இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவிலையே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டது.

அதே நேரம் இன்றைய தினம் வியாழக்கிழமை அப்பகுதியில் நின்ற பெண் உள்ளிட்ட ஐவரை எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இன்றி பலாலி பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் பொலிஸ் தடைகளை மீறி உள்ளே சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செ கஜேந்திரன் உள்ளிட்டவர்களை சந்தித்தது தமது ஆதரவை தெரிவித்து கலந்துரையாடினார்கள்.

அதேநேரம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் , உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள் , வீதி தடை கம்பிகள் என்பவற்றை விகாரைக்கு அருகில் வீதிகளில் போட்டு , வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

அதேவேளை பெருமளவான இராணுவம் துப்பாக்கிகளுடன் விகாரையை சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு , கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert