Mai 7, 2024

யாழ். பல்கலை முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் தொழிற் சந்தை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட வளாகத்தில் நடைபெற்றது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துத் துறையின் ‘AHEAD’ செயற்றிட்டத்தின் கீழ், தொழிற்றுறைத் தொடர்பு மையம் மற்றும் தொழில் வழிகாட்டல் அலகு ஆகியவை இணைந்து நடாத்தும் இந்தத் தொழில் வாய்ப்பு சந்தையில்  கணக்கியல், நிதியியல், மனிதவள, சந்தைப்படுத்தல், வணிகத் தொழிநுட்பம் , தொடர்பாடல் மற்றும் ஆடை உற்பத்திகளில் ஈடுபடும் சுமார்  27 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு நான்காம் வருட இரண்டாம் அரையாண்டு மாணவர்களுக்கான பயிற்சி வாய்ப்பைப் (Internship Opportunities) பெற்றுக் கொடுப்பதற்கான நேர்முகத் தேர்வுகளை நடாத்தின. 

இந் நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தமது தொழில் வாய்ப்புகள் பற்றிய அறிவைப் பெற்றுக் கொண்டனர். 

மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் சுயவிபரக்கோவை என்பவற்றை எவ்வாறு சிறந்த முறையில் ஒழுங்கமைத்து வெற்றியடைவது தொடர்பான செயலமர்வு ஒன்றையும் இலங்கை ஆளணி பட்டய நிறுவனம் (CIPM) நடாத்தியது. 

இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை,  பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert