Mai 21, 2024

“போரின் சாட்சியம்” நூல் கனடாவில் வெளியிடப்பட்டது!

இறுதிப்போரில் பணியாற்றிய ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு எழுதிய “போரின் சாட்சியம்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கனடாவின் வன்கூவரில் நடைபெற்றது.

துசாந்தன் சிவரூபன் தலைமையில், தமிழ்வணக்கப்பாடல் மற்றும்  எம்.வி.சன்சி கடல் வணக்கப்பாடலுடன் நிகழ்வு ஆரம்பமானது. 

தொடர்ந்து இன அழிப்புச் செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் சுடரினை கந்தையா பாலசுப்பிரமணியம் ஏற்றினார்.

முள்ளிவாய்க்கால் நினைவுக்கவிதையினை அட்சரா வரதராசா நிகழ்த்தினார். நூலுக்கான அறிமுக உரையினை ராதா நிகழ்த்தினார்.

நூலினை இறுதிப் போரின் போது மூன்று பிள்ளைகளையும் கணவரையும் பறிகொடுத்த சாந்தி வெளியிட்டு வைக்க இளைய தலைமுறையின் சார்பில் போர்க் காலத்தில் குழந்தையாக வாழ்ந்த  அபி சுவேந்திரகுமார் பெற்றுக்கொண்டதுடன் சிறப்புரையினையும் வழங்கியிருந்தார்.

நூலின் ஆசிரியரான சுரேன் கார்த்திகேசு ஈழநாதம் பத்திரிகையின் அலுவகச் செய்தியாளராகவும் பக்கவடிவமைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.

ஏப்ரல் மாதம் முல்லைத்தீவின் வலைஞர் மடத்திற்கும் இரட்டைவாயக்காலுக்கும் இடைப்பட்ட பகுதியில் பணி நிமிர்த்தம் சென்றபோது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்திருந்தார்.

போரின் பின்னர் தாய்லாந்திலிருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற சன் சீ கப்பல் மூலம் அகதியாக கனடாவைச் சென்றடைந்திருந்தார்.

கடல் பயணத்தின் போது, ஏற்கனவே அடைந்திருந்த காயத்தின் பாதிப்புக்களாலும் கப்பலில் போதிய மருத்துவ வசதிகள் இன்மையாலும் உயிராபத்தினையும் எதிர்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை “போரின் சாட்சியம்” நூலின் முதற்பிரதியினை கனடாவின் முடியரசு – பழங்குடிகள் உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் நூல் ஆசிரியர் கடந்தவாரம் கையளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert