März 28, 2024

சுதந்திரம் வேண்டுவோருக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம் – தமிழீழ தேசியத் தலைவர்

சுதந்திரம் வேண்டுவோருக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம்.!

எமது போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு ஈடுகொடுத்து தனது விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோட முடிந்தது என்றால், அதற்கான அடிப்படைக் காரணம் எமது இலட்சிய உறுதிதான் என்பதை நான் திட்டவட்டமாகக் கூறுவேன். நீண்ட வரலாற்று அனுபவத்தில் நான் கண்ட உண்மை இது.

ஒரு விடுதலைப் போராட்டம் பல சூறாவளிகளைச் சந்திக்கிறது. பல நெருக்கடிகளை எதிர் கொள்கிறது.

கொந்தளிப்பான பல சூழ் நிலைகளுக்கு முகம் கொடுக்கிறது. விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம். சாவையும், அழுவையும், துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான் நாம் சுதந்திரம் எனும் சுவர்க்கத்தைக் காணமுடியும். கரடு முரடான பாதைகள் நிறைந்த இந்த இலட்சியப் பயணத்தில் எமக்கு ஒரேயொரு ஊன்று கோலாக இருப்பது எமது உறுதிதான்.

இன்று ஒரு புதிய நெருக்கடியான வரலாற்றுத் திருப்பத்தை நாம் சந்தித்து நிற்கிறோம்.

எதிரிப் படைகள் யாழ்ப்பாணக் குடாநாட்டை முற்றுகையிட்டு நிற்கின்றன. பொருளாதாரத் தடைகளை இறுக்கி உணவுப் பஞ்சத்தை உண்டு பண்ண எதிரி முனைகிறான். இராணுவ அழுத்தம், பொருளாதார நெருக்குதல் என்ற ரீதியில் இரு முனைகளில் எமது மக்கள் மீது யுத்தம் ஒன்று ஏவப்பட்டிருக்கிறது. எமது போராட்டத்தின் அசைக்க முடியாத அரணாக நிற்கும் எமது மக்களின் மனபலத்தை உடைத்துவிட எதிரியானவன் எல்லாவித தந்திரோபாயங்களையும் கடைப்பிடிக்கலாம் என்பது எமக்கு தெரியாதது அல்ல.

எமது மக்கள் சிங்கள இனவாத அடக்கு முறையின் அக்கினிப் பட்டறையில் புடம் போடப்பட்டவர்கள் அரச பயங்கரவாதத்தின் அகோரங்களைச் சந்தித்தவர்கள் துன்பச் சிலுவையைச் சதா சுமந்து பழகிரவர்கள். மரணத்தின் நிழலில் படுத்துறங்கி வாழ்பவர்கள்.

களைத்துப்போனவனின் இறுதி ஆயுதமாக உணவுப் போர் எமது மக்கள் மீது தொடுக்கப்படலாம் பட்டினித் தீயால் மக்களின் மன உர்தியைச் சுட்டெரிக்க எதிரி முயற்சிக்கலாம். ஆனால் சுதந்திரப் பசியால் உறுதி பூண்ட மக்களை சோற்றுப்பசி தீண்டி விடப்போவதில்லை.

எனது அன்பான மக்களே!

இன்று நாம் எதிர் கொள்ளும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் எதிரியின் எந்தச் சவாலுக்கும் நாம் முகம் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

எமது மனஉறுதிக்கு எதிரி சவால் விடுகிறான். இந்தச் சவாலை ஏற்பதற்கு எமக்கு ஆன்ம உறுதியைத் தவிர வேறு ஆயுதங்கள் தேவையில்லை.

-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert