Mai 6, 2024

காலிமுகத்திடலின் கதையென்ன?:நிக்சன்!

 காலி முகத்திடல் நடப்பது பற்றி முன்னணி தமிழ் கருத்தியலாளர் நிக்சன் பதிவு செய்துள்ளார்.

„காலி முகத்திடலுக்கு நேரடியாகச் சென்று போராட்டம் பற்றி அவதானித்தேன். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகள் அனைத்தும் சர்வதேசத் தரம் வாய்ந்ததாகவே உள்ளன. 

உணவு வகைகள் உட்பட செய்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் அவதானித்தால், மிகப் பெரிய நாட்டினுடைய முகவர்கள் சிலர் பின்னணியில் செயற்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுகின்றது. 

சாதாரண துண்டு துணிகளினால் அமைக்கப்பட்ட கொட்டகைகள் போன்று அவை தெரியவில்லை. அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் அமைக்கும் கொட்டகைகளுக்கு வித்தியாசம்  தெரியும். 

—–கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்குப் போக வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை–

ஆனால் இதனை வெறுமனே ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகமாக மாத்திரம் காண்பிக்க, சிங்கள முற்போக்காளர்கள் பலர் திரைமறைவிலும் நேரடியாகவும் ஈடுபடுகின்றனர் என்பது பட்டவர்த்தனம் (கொழும்பில் அரசார்பற்ற நிறுவனங்களை வைத்திருக்கும் சில பிரமுகர்கள்) 

ஆகவே—–இப்போது சிங்கள இனவாதம் தீவிர பௌத்த தேசியவதிகளிடம் இருந்து, முற்போக்கு எனப்படும் மிதவாதச் சிங்களம் என்ற போர்வைக்குள் தற்காலிகமாகவும் பாதுகாப்பாகவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது—

இந்த மிதவாதச் சிங்கள முற்போக்காளர்களையே ஈழத் தமிழர்கள்  பலரும் தமக்காகக் குரல் கொடுப்போர் என்று 2009 வரை நம்பியிருந்த வரலாறும் உண்டு.  

சிங்கள ஊடகவியலாளர்கள், சிங்களக் கல்வியாளர்கள் சிலரும் அவசர அவசரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிங்கள இளைஞர், யுவதிகளின் மன நிலையை இலங்கைத் தேசியத்துக்கு ஏற்ப மாற்றி வருகின்றனர் என்பதையும் உணர முடிகின்றது.  

ஏனெனில் ஆரம்பத்தில் யாருடைய உந்துதலும் இன்றி இயல்பாகவே நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்கள். யுவதிகள் பலரும் தெரிந்தோ தெரியாமலோ தமிழர்களின் போராட்டத்தை நியப்படுத்தித் தமக்குத் தெரிந்த ஓரிரு விடயங்களை ஆவேசமாகவும் பேசி வந்தனர்.  

ஆனால் இப்போது அப்படி எவருமே பேசுவதில்லை— 

அதற்குக் காரணம் பௌத்த தேசியவாதத்தைத் தற்காலிகமாகக் கையில் எடுத்துப் பாதுகாத்து வரும் சிங்கள முற்போக்குவாதிகளே. 

காலி முகத்திடலில் உள்ள இளைஞர்களுக்குக் கோட்டாபய ராஜபக்சவையும் அவரது குடும்பத்தையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டால், எல்லாமே சரியாகிவிடும் என்ற கருத்து மாத்திரமே சமூகவலைத்தளங்களில் ஊட்டப்படுகின்றது. 

ஆனால் முப்பது வருட போர் அதன் பின்னரான 12 வருடங்களில் வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்களை நவீனமயப்படுத்தல் மற்றும் புத்தர் நிலை வைத்தல், சிங்களக் குடியேற்றங்களுக்கான நிதிகள் போன்ற காரணங்களே தற்போதைய நெருக்கடி நிலை என்று, போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு சொல்வதற்குச் சிங்கள முற்போக்காளர்கள் விரும்பவில்லை. 

பாதுகாப்பு அமைச்சுக்கு 37 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியைக்கூட இவர்கள் எழுப்பவில்லை.  

கோட்டாவுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் இனவாதத்தைத் தற்காலிகமாகக் கையில் எடுத்துப் பாதுகாத்து வரும் இந்தச் சிங்கள முற்போக்குவாதிகள் எல்லாவற்றையும் மூடி மறைக்கின்றனர். 

உண்மை தெரிந்த சிங்கள இளைஞர்களைக்கூடப் பேசவிடாமல் தடுக்கின்றனர். வெறுமனே ராஜபக்ச குடும்பத்தை வீட்டுக்கு அனுப்பும் பிரச்சினையாக மாத்தரமே இளைஞர்களைப் பேச வைக்கப்படுகின்றனர். 

இதுதான் கோட்டாவுக்கு எதிரான போராட்டத்தின் உண்மை நிலைமை—

—தயவு செய்து தமிழர்கள் இந்தப் போராட்டத்துக்குள் அவசரப்பட்டுப் பங்குப்பற்றி  இலங்கைத் தேசியக் கொடிக்குள் ஈழத்தமிழர் விவகாரத்தை முடக்க வேண்டாம்—–  

பௌத்த தேசியவாதத்தைத் தற்காலிகமாகப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இந்த சிங்கள முற்போக்குவாதிகள், ரணில் அல்லது சஜித்திடம் அல்லது வேறு யாரிடமாவது அவற்றை ஒப்படைத்துவிட்டு மீண்டும் தமிழர் பக்கம் வந்து, நீலிக்கண்ணீர் வடிப்பர். இனியாவது தமிழர்களுக்குப் பட்டறிவு வர வேண்டும்“

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert