April 28, 2024

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவை இடைநிறுத்த தீர்மானம்!

தை பொங்கல் தினத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் கணிசமான எதிர்ப்பையடுத்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வருடா வருடம் தை பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் திடலில் நடாத்தப்பட்டு வரும் பட்டத்திருவிழாவை இம்முறையும் நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து அறிவித்திருந்தனர்.

ஏற்பாட்டாளர்கள் குழுவை சேர்ந்த சிலர் அமைச்சர் நாமல் ராஜபக்சவையும் சந்தித்திருந்தனர். பட்டத்திருவிழாவிற்கு விளையாட்டு அமைச்சு அனுசரணை வழங்குமென அவர் அறிவித்திருந்தார்.

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவில் அமைச்சர் நாமல் கலந்து கொள்வதற்கு தமிழ் மக்களிடம் கணிசமான எதிர்ப்பு கிளம்பியது.

தமிழ் மக்களின் அஞ்சலி நிகழ்வுகளை தடைசெய்ய அரசு பயன்படுத்தி உத்தியான, கொரோனா காரணத்தை கையிலெடுத்து, பட்டத்திருவிழாவை இடைநிறுத்த நீதிமன்றத்தை நாடவுள்ளதாக எம்,கே.சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பட்டத்திருவிழாவை ஒழுங்கமைக்கும் விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் பொதுச்சபை நேற்று மாலை கூடியது. இதன்போது பட்டத்திருவிழாவை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டது.