April 28, 2024

மாகாணசபை பற்றி கதைக்கவில்லை!

இந்தியாவுடனான திருகோணமலை எண்ணைய் தாங்கி ஒப்பந்தத்துக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்த வலுசக்தி அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில, மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தால் அண்மைய நாட்களாக எவ்வித கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவில்லை என்றார்.

 மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கைக்கு எந்தவொரு வெளிநாடும் அழுத்தம் விடுக்கவில்லை எனத் தெரிவித்த அவர், எந்த நாட்டினதும் அழுத்தத்துக்கு அடிபணியும் கலாசாரம் எமது நாட்டில் இல்லை என்று குறிப்பிட்டார்.

அத்துடன், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்கான யோசனை அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த விடயம் தொடர்பில் இந்தியாவுடன் 16 மாதங்கள் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இறுதியில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் இரு நாடுகளும் இணைந்த கூட்டு அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான இணக்கப்பாட்டுக்கு வந்ததாகவும் இது தொடர்பான ஒப்பந்தம் அடுத்த வாரமளவில் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.