September 13, 2024

சுகாதார நடைமுறைகளுடன் நல்லூர் திருவிழா?

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடித்து ஆலய வழிபாடுகளில் மேற்கொள்ள முடியும் என யாழ்.மாநகர சபை பிரதி மேயர் து.ஈசன் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஆலய வளாகத்தில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான விடயங்களை கண்காணிப்பதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள்.
அத்துடன் இம்முறை ஆலய திருவிழாவின் போது அன்னதானம், காவடி நேர்த்திக்கடன் போன்றவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.  ஆலயத்திற்கு வரும் பக்தர்களை மட்டுப்படுத்துவது தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் சாத்தியமாகவில்லை.
ஆலய வளாகத்தில் இம்முறை கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கலைநிகழ்வுகள் சொற்பொழிவுகள் இதர சமயம் சார்ந்த பஜனை நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்துக்கு வருபவர்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடிப்பதன் மூலம் நாங்கள் இந்த தொற்று நோயிலிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். குறிப்பாக சமூக இடை வெளியிணை பேணுதல்  மிகவும் அவசியமானது.
பக்தர்கள் முகக்கவசம் அணிவதுடன் ஆலயத்தின் சுற்றாடலில் கைகளைக் கழுவுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் 24ஆம் திகதி ஆலயத்தின் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.
இம்முறை கொரோனா தொற்று காரணமாக கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் யாழ். மாநகர சபைக்கு வர வேண்டிய 20 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நாங்கள் வருமானத்தினை பார்க்கவில்லை மாறாக பொதுமக்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். எனவே யாழ் மாநகர சபை எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு அனைத்து பக்தர்களும் தமது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.