September 11, 2024

ஆயிரம் கைதிகள் விடுதலை:அரசியல் கைதிகளல்ல?

இலங்கையில் சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்றினை  கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளாராம்.

எனினும் தமிழ் அரசியல் கைதிகள் இதனுள் அடங்கியிருக்கவில்லை.
ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தலைமையிலான குறித்த குழுவில், சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர, மேனக அரங்கன, ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் பியூமந்தி பீரிஸ், சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய ஆகியோர் அடங்குகின்றனர்.
இதுவரை சுமார் 26,000 சிறைக் கைதிகள் உள்ளதுடன் அவர்களில் 15,000 இற்கும் மேற்பட்டோர், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கைதிகள் என சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்துள்ளார்.
இதனால் சிறைச்சாலைகளுக்குள் ஏற்படும் நெரிசலை தவிர்ப்பதற்காக, சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1,000 கைதிகளின் தகவல்கள் அடங்கிய அறிக்கையை, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.