Mai 23, 2024

தென்னிலங்கையின் சமூகவலைத்தளம் மூலம் எம்.கே. சிவாஜிலிங்கம் அதிரடி

தென்னிலங்கையில் சமூகவலைத்தளம் மூலம் இனவாத சிந்தனையுடன் அணுகி பரபரப்பான நேர்காணல்களை மேற்கொண்டு பிரபலமடைந்துள்ள Chamuditha என்ற பேட்டியாளர் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் மேற்கொண்ட நேர்காணல் வடக்கில் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தும் அளவிற்கு தாக்கம் செலுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடமும் அவர் நேர்காணல் கண்டு வெளியிட்டுள்ளார்.
சிங்கள மொழியில் இடம்பெற்ற அந்த நேர்காணலின் மொழியாக்கம் தமிழில்,
கேள்வி: இப்பொழுது விக்கினேஸ்வரன் அவர்களின் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றீர்கள்?
எமது ஐந்து கட்சிகள் விக்கினேஸ்வரன் அவர்களின் கட்சியுடன், விக்கினேஸ்வரனின் தலைமையின் கீழ் புதிய கூட்டணியில் இணைந்துள்ளன.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கும் போதே இனவாதமாக தான் இருந்துள்ளது தானே?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதக் கட்சி அல்ல. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே அது ஆரம்பிக்கப்பட்டது.
கேள்வி: ஏன் அதிலிருந்து விலகினீர்கள்? ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காகவா?
இல்லை. இல்லை. அப்படியில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் அதிகமாக தவறான செயல்களை செய்துள்ளது. குறிப்பாக 2009 மே 18ம் திகதி பின்பு. 2010ம் ஆண்டு தேர்தலில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிக்;க தயாராகியது.
கேள்வி: அது தவறா?
ஆமாம். அது தவறு என்று தான் நான் கூறுகின்றேன். சிங்கள மக்கள் சிங்கள தலைவர்களைத் தெரிவு செய்ததன் பின்னர் அந்த தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். யுத்தத்தின் பின்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிங்கள மக்களின் வீரனாக இருக்கும் போது அவர் வெற்றிப் பெறுவார் என்று நன்கு தெரிந்திருந்தும் நாம் மற்ற பக்கம் ஆதரவு அளித்து ஆத்திரப்படுத்துவதில் அர்த்தமில்லை என்று தான் நான் கூறுகின்றேன்.
கேள்வி: எங்கே போர்க் குற்றம் நடைபெற்றுள்ளது?
போர்க் குற்றம் நடைபெற்றுள்ளது. வன்னியில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இன அழிப்பும் நடைபெற்றுள்ளது.
கேள்வி: அது எப்படி போர்க்குற்றமாகும்? விடுதலைப்புலிகள் எத்தனைப்பேரை கொன்றொழித்திருக்கின்றார்கள்? நிராயுதபாணிகள், பொதுமக்கள், மதகுருமார் என்று?
இல்லை. படையினர் இறப்பதும், விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் இறப்பதும் போராகும். சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். அது தவறான செயலாகும். தவறெனில் தவறு தான். அது அரசாங்கம் செய்தாலும் தவறுதான். தமிழர்கள் பக்கம் செய்தாலும் தவறுதான். இதனால் இறுதிப் போரில் ஐ.நா செயலாளர் நாயகம் நியமித்த கமிட்டியின் அறிக்கையின்படி 40 ஆயிரம் அப்பாவி பொது மக்கள் இறந்துள்ளனர் என்றுள்ளது.
கேள்வி: அப்படியெனில் ஏன் விடுதலைப்புலிகள் செய்த படுகொலைகளை ஏன் பற்றி பேசுகிறீர்கள் இல்லை?
இல்லை. இல்லை. இரு தரப்புகளினாலும் போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று அறிக்கையில் உள்ளது. இந்த 40 ஆயிரம் பேரை படைகள் கொன்றனர் என்று தான் அறிக்கையில் உள்ளது. மற்றுமொரு கமிட்டி நியமிக்கப்பட்டிருந்தது. அதில் 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு அல்லது காணாமற்போயுள்ளனர். யானை செய்ததையும், எலி செய்ததையும் ஒப்பிட்டுக் கூற முடியாது. விடுதலைப்புலிகள் நூற்றுக்கு நூறு வீதம் போர்க்குற்றம் செய்யவில்லை என்று நான் கூற வரவில்லை. தவறு இழைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் உள்ளது. அரசாங்கம் செய்துள்ளதா இல்லையா என்பதனை விசாரித்து கண்டறிய வேண்டும்.
கேள்வி: நீங்களும் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புப்பட்டிருந்தீர்கள்?
விடுதலைப்புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட முன்பு 1973ல் 16 வயதில் டெலோவுடன் இணைந்து கொண்டேன். அவ்வேளை தங்கத்துரை, குட்டிமணி, பிரபாகரன் அனைவரும் டெலோவில் இருந்தனர். அவர்கள் மூவர் முன்னிலையில் குமரப்பா, மாத்தையா, நான் ஆகிய மூவரும் இணைந்துகொண்டோம். அதன் பின்பு பிரபாகரன் 1974ல் விலகி சென்று தமிழ் புதிய புலிகள் என்ற பெயரில் வுNவு என்ற பெயரில் இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார்.
கேள்வி: பிரபாகரன் 80 களில் நாட்டின் பிரதான பயங்கரவாத தலைவரான பின்பு அவரை நீங்கள் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லையா?
அவரை பயங்கரவாத தலைவர் என்று கூறுவது தவறு. அவர் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தலைவராக தான் அவரைப் பார்க்கின்றேன். மாறாக பயங்கரவாத தலைவர் என்று பார்க்கவில்லை.
கேள்வி: சரி இதைச் சொல்லுங்கள். சிவாஜிலிங்கம் மட்டுமே பிரபாகன் வீரன் என்று ஏற்றுக்கொள்கின்றார். ஆனால் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அல்லவா?
பொதுசன அபி;ப்பிராய வாக்கெடுப்பு ஒன்றினை நடத்திப் பாருங்கள். தமிழ் மக்கள் அவரை வீரன் என்று சொல்கின்றனரா இல்லையா என்று.
கேள்வி: அப்படியானால் சுமந்திரன் ஏன் பிரபாகரனின் ஆயுதப் போராட்;டத்தினை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறுகின்றார்?
சுமந்திரன் தமிழ் மக்களின் துரோகி. அவர் அவ்வாறு தான் சொல்வார். சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து செல்கிபவர். தவறான வழியில் தமிழ் மக்களை அடக்குமுறைப்படுத்திய சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலுக்கு உதவி செய்தவர் தான் சுமந்திரன். அவருக்கு எஸ்டிஎவ் பாதுகாப்பு அதிகரிகள் 16 பேர் பாதுகாப்பு வழங்குகின்றனர். மோட்டர் சைக்கிள் தொடரணி பாதுகாப்பு உள்ளது. ஏன் அது? அவரும் முன்னாள் பா. உ நானும் முன்னாள் பா. உ. ஏனக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. பாதுகாப்பு கொடுத்தால் ஓரிருவர் கொடுக்கலாம்.
கேள்வி: உங்களது தலைவர்களைக் கொன்றவரை வீரன் என்று கூறுகின்றீர்கள்?
அது சகோதர இயக்கங்களுக்கு இடையிலான பிரச்சினை. ஆனால் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறிசபாரட்ணத்தின் நினைவு நாளை அனுட்டித்து வருகின்றோம்.
கேள்வி: நினைவு நாள் அனுட்டிப்பது பற்றி நான் கேட்கவில்லை. தலைவரைக் கொன்றவர் எப்படி வீரனானார் என்று தான் கேட்கின்றேன்?
அந்த ஒரு விடயத்தினை மட்டும் பார்த்து தீர்மானிக்க முடியாது.
கேள்வி: அப்படியானால் மாத்தையாவுக்கு என்ன நடந்தது?
மாத்தையா பிரபாகரனைக் கொல்ல முயற்சித்தார் அதனால் உள்ளே மோதல்கள் ஏற்பட்டன. அது அவர்களின் பிரச்சினை.
கேள்வி: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியது யார்?
விடுதலைப்புலிகள் தான் உதவி செய்தனர்.
கேள்வி: அப்படியானால் ஏன் சுமந்திரன் விடுலைப்புலிகள் தமிழத் ;தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கவில்லை என்று கூறுகின்றார்?
சம்பந்தனும் அப்படித் தான் கூறுகின்றார். சுமந்திரனும் அப்படிக் கூறுகின்றார். அது பச்சைப் பொய். அப்படியெனில் நான் கேட்கின்றேன் ஏன் சம்பந்தன் அங்கே நடந்த கூட்டங்களுக்கு சென்றார்? பிரபாகரனை சந்திக்க 2002ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் 15 பேர் சென்றனர்.
கேள்வி: நான் தமிழ்ச்செல்வனை கிளிநொச்சியில் சந்திக்க சென்ற வேளை சம்பந்தனை நேருக்கு நேர் சந்தித்திருக்கிறேன். அது உண்மை. நான் அது பற்றி கேட்கவில்லை. எனக்கு நீங்கள் நேரடியாக பதிலை கூறுங்கள். த.தே. கூ விடுதலைப்புலிகளின் அரசியல் இயக்கம் தானே?
இல்லை. இல்லை இது இயக்கம் அல்ல. தமிழ் மக்களிள் விடுதலைக்காக போராடுதல்.
கேள்வி: அது விடுதலை இயக்கம் அல்லவா? விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியற் பிரிவு தானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் அரசியற் விடுதலைக்காக போராடியதனால் நாங்கள் அவர்களுக்கு உதவி செய்தோம்.
கேள்வி: அதனை எப்படி அரசியல் விடுதலைப் போராட்டம் என்பீர்;கள். குண்டைக் கட்டிக் கொண்டு வந்து பொதுமக்களைக் கொல்வதும், அரந்தலாவவில் பிக்குகளைக் கொல்வதும்?
அப்படியாயின் நான் கேட்கின்றேன். ஏன் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகள் தலைவருடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டார். ஜே.வி.பியுடன் அவ்வாறான உடன்படிக்கைகள் செய்யப்பட்டனவா?
கைச்சாத்திடுவதானால் அவர் தலைவர் என்று ஏற்றுக்கொண்டு, அதாவது தமிழர்களின் தலைவர் என்று ஏற்றுக்:கொண்டு தானே கைச்சாத்திட்டார்.
கேள்வி: நீங்களும் தான் IGSE தொடர்பான பிரபாகரனின் செய்தியை ரணிலுக்கு எடுத்துச் சென்றீர்கள் என்று கதைகள் வெளியாகியிருந்தன?
ஆம். அது பற்றி நான் கூறுகின்றேன். 2003 ஒக்டோபர் 31ம் திகதி தமிழ்ச்செல்வன் எரிக் சொல்ஹேயிமுக்கு அந்த தகவலை வழங்கினாhர். அது பற்றி அரசாங்கத்துடன் பேச முயற்சித்த போது தான் அப்பொழுது தான் ஜே.விபி நீதிமன்றம் சென்று அது நிறுத்தப்பட்டது. 2005ம் ஆண்டு புலிகள் எங்களை கிளிநொச்சிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தனர். தமிழ்ச்செல்வன் தான் அழைத்திருந்தார். அதற்கேற்ப சம்பந்தனின் தலைமையில் 20 பேர் சென்றோம். தமிழ்க் கூட்டமைப்பில் 22 பேர் இருந்தனர். ஆனால் 2 பேர் வரவில்லை. ஏன் என்று தெரியவிவ்லை? 20 பேர் சென்று கலந்துரையாடினோம். அப்பொழுது தமிழ்ச்செல்வன் கூறினார், ஐ.தேகவின் நவீன் திசாநாயக்க, மிலிந்த மொறகொட கூறியிருந்தனர், கருணாவை அவர்கள் தான் பிரித்தனர் என்றும், புலிகளை நாசமாக்கினோம் என்றும். அதனால் இந்த தேர்தலை நாம் பகிஷ்கரிக்க வேண்டும். தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று மத்திய குழு தீர்;மானித்துள்ளதாகக் கூறினார். பெரும்பாலானவர்கள் அமைதியாக இருந்த போது நான் கேட்டேன், அப்படியனானால் ஏன் எங்களை அழைத்தீர்கள் என்று. நீங்கள் தீர்;மானம் எடுத்தால் நீங்கள் அதனை அறிவித்திருக்கலாம் தானே என்றேன்.
கேள்வி: பொய் சொல்லாதீர்;கள். நீங்கள் பிரபாகரனுக்கு பயந்தவர். அப்படி நீங்கள் சொல்லி இருக்க மாட்டீர்கள்?
அப்படி அல்ல. உங்களுக்கு வேண்டும் எனில் இப்பொழுது சம்பந்தனிடம் கேட்டுப் பாருங்கள். எங்களுடன் பேசிவிட்டு அவர்களின் மத்திய குழுவில் கலந்துரையாடி முடிவைக் கூறுவதாகக் கூறினர். அப்பொழுது இறுதியாக நான் கேட்டேன் ரணில் உங்களுடன் தானே உடன்படிக்கை கைச்சாத்திட்டார் அல்லவா ஏன் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என்று. சிவாஜிலிங்கம் கேட்ட கேள்வி நல்லது என்று கூறிய அவர், நாங்கள் இடைக்கால நிர்வாக சபை தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளோம். அவர் ஜனாதிபதியான பின்பு அது பற்றி எம்முடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூற வேண்டும் என்றனர். அங்கு அவர்கள் தர சொல்லி கேட்கவில்லை. பேச்சுவார்த்;தைக்கு தயார் என்றே குறிப்பிட்டனர்.
கேள்வி: சரி சுருக்கமாகக் கூறுங்கள், அந்த செய்தியை எடுத்துக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க நீங்கள் சென்றீர்களா தானே?
நோர்வே ஊடாக இரகசிய ஆவணமாக வழங்கப்பட வேண்டும் என்று. அந்த வேலையை யார் பொறுப்பெடுக்க போகின்றீர்கள் என்று கேட்டதற்கு பெருமளவானோர் அமைதியாக இருக்க நான் அந்த வேலையை பொறுப்பெடுத்தேன். அந்த செய்தியை வழங்கினேன்.
கேள்வி: யாரிடம் கையளித்தீர்கள்? ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளரிடம் பாராளுமன்றத்தில் மூன்றாம் மாடியில் வைத்து கையளித்தேன். கட்சியில் உள்ள மற்றைய சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு நான் கூறினேன், வன்னியிலிருந்து நான் விசேட செய்தியுடன் வந்திருக்கின்றேன். ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதனை சற்று நினைவூட்டி 4, 5 நாட்களுக்குள் அதற்கு பதில் அளிக்குமாறு. ஒரு வாரம் கடந்த பின்னும் எந்த பதிலும் வரவில்லை. அவர்களின் அனுப்பிய தகவலுக்கு பதில் எதுவும் வரவில்லை என்று நான் தமிழ்ச்செல்வனுக்கு கூறினேன். இது தான் நடந்தது. ஜனாதிபதித் தேர்தலில் புலிகள் பணம் வாங்கினார்கள் என்று கூறப்படும் கதைகள் தவறானவை..
கேள்வி: பிரபாகரனின் குடும்பத்தில் வேறு யாரும் தற்போது உயிருடன் இல்லை தானே?
அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்பதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த நால்வரில் இரு புதல்வர்களும் இறந்துவிட்டனர் என்பதனை அதிகளவில் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலைமை உள்ளது. புதல்வியும் மனையியும் இறந்துவிட்டனரா உயிருடன் உள்ளனரா என்பதனை நிரூபிக்க தக்க சான்றுகள் இதுவரை இல்லை.
கேள்வி: பிரபாகரன் இறந்துவிட்டார் தானே?
பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்ன காரணம் என்று தெரியுமா? உடலைக் காட்டினார்கள். நான் இன்றும் சவாலிடுகின்றேன். அன்றும் சாவால் விடுக்கின்றேன். ஆனால் இதுவரை மரபணு பரிசோதனை நடத்தப்படவில்லை. ஏன் இதுவரை பரிசோதனை நடத்தப்படவில்லை?
கேள்வி: இது பைத்தியக்காரத்தனமான கதையல்லவா? கருணா, தயா மாஸ்டர் வந்து அதனை பிரபாகரனின் உடல் என்று உறுதிப்படுத்தினரே?
கருணா அவ்வளவு பொய்க் கூறுகின்றார் எனின் அது வேறு கதை. நான் மே மாதம் 21ம் திகதி சென்னையிலிருந்தும் சவால் விடுத்தேன். நான் கேட்கின்றேன், இன்றும் பிரபாகரனின் தாய் தந்தையரின் சாம்பல் இருக்கின்றது. சகோதரிகளின் மரபணு பரிசோதனை செய்ய முடியும். பிரபாகரனின் உடலைக் கைப்பற்றிய பின்பு ஏன் அதனை உறுதிப்படுத்த அவர்கள் இதனை செய்யவில்லை? மற்றையது தயா மாஸ்டர், கருணா அம்மான் அழைத்துக் கொண்டு செல்ல முடியுமாயின் நீதிவானை அழைத்துச் சென்று ஹெலியில் அவரின் உடலை கிளிநொச்சி வைத்தியசாலைக்கோ அல்லது இதர வைத்தியசாலைக்கோ எடுத்துச் சென்று உரிய நடவடிக்கைகளை எடுத்து ஏன் இன்று வரை மரணசான்றிதழ் கொடுக்கவில்லை. அவர் சாதாரண பிரஜை அல்ல. இந்தியாவின் ரஜீவ் காந்தி மரணத்திற்கு தேடப்பட்ட நபர். நான் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றேன். சவால் விட்டு வருகின்றேன். மரபணு பரிசோதனை செய்யுங்கள். சாம்பலை என்னால் தர முடியும். இந்தியாவில் நெடுமாறன், வைக்கோ, சீமான் ஆகியோரிடம் சாம்பல் உள்ளது. நான் இல்லாத காலத்திலும் அந்த சாம்பலைப் பெற்று மரபணு பரிசோதனை செய்ய முடியும்.
கேள்வி: தெற்கில் சிலர் சிவாஜிலிங்கம் ஒரு புலி என்று சொல்வது சரி தான் போலிருக்கின்றதே?
இல்லை. இல்லை. அப்படியில்லை. விடுதலைப்புலிகளுடன் எமக்கு மோதல் இருந்தது. பிரச்சினைகள் இருந்தன. கோபம் இருந்தது. அதனால் ஒரு நாள் கூட நான் அவர்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆனால் 1980ல் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து எல்லோரும் விலகி பிரபாகரன் தனிமையான பின்னர் அவரை நாம் தான் டெலோ அமைப்புக்கு சேர்த்தேன். குட்டிமணி, தங்கத்துரையுடன் பிரபாகரன் இணைந்து மக்கள் வங்கியில் 81 லட்சத்தினைக் கொள்ளையடித்தார். எங்களது தலைவர்களைக் கைது செய்த பின்பு நான் அவரை படகில் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தேன். 1990ல் ஆ.சு நாராயணசாமி எழுதிய புத்தகத்தில் அவ்விடயம் உள்ளது.
கேள்வி: பிரபாகரன் இறந்த பின்பு ஆயுதப் போராட்டம் முழுமையாக மரணித்து விட்டது என்று முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது அல்லவா?
புலிகள் அமைப்பு 2009 மே மாதம் 16ம் திகதி தமது ஆயுதப் போராட்டத்தை நிறுத்திவிட்டதாக அதாவது மௌனித்துவிட்டதாக பிரகடனப்படுத்தியிருந்தது.
அதன் பின்பு தான் அவர்களுக்கு படையிடம் சரணடையுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்படி வெள்ளைக் கொடியுடன் வந்து சரணைடைந்தவர்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்பு 6 ஆயிரம் புலி உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் சரணடைந்தனர்.
கேள்வி: இவை அனைத்தும் பொய்க்கதைகள் அல்லவா? ஜெனீவா சென்று பொய் கதைகளை தானே கூறி வருகின்றீர்கள்?
இல்லை. இவை பொய் அல்ல. ஜெனிவாவுக்கு சென்று நாம் நிரூபித்துள்ளோம். அப்படியானால் அரசாங்கம் ஏன் விசாரணை செய்ய வேண்டாம் என்று கூறுகின்றது? ஜெனீவாவில் 30ஃ1ல் உள்நாட்டில் சர்வதேச நீதிபதிகளை அழைத்து வந்து விசாரணை நடத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. ஏன் விசாரணை நடத்த முடியாது?
கேள்வி: ஏன் வெளிநாட்டு நீதிபதிகள்? எம்மிடம் தான் சிறந்த சட்டத்துறை உள்ளதே?
அவ்வாறு எனில் ஏன் அங்கே சரி என்று சொன்னீர்கள்? இணை அனுசரணை பற்றி பேசினீர்கள்?
கேள்வி: இணை அனுசரனைப் பற்றி பேசியது நல்லாட்சி அரசாங்கம் அல்லவா? இந்த ஜனாதிபதி என்ன சொல்கின்றார்? இவை எல்லாவற்றிலிருந்தும் விலகுவதாகவும், உள்நாட்டில் விசாரண நடத்தப்படும் என்றும் கூறுகின்றார். சாதாரண பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோரை படையினர் கொன்றுள்ளனர். இன அழிப்பும் நடைப்பெற்றுள்ளது.
கேள்வி: புலிகள் தானே உங்களது தலைவர் சபாரட்ணத்தினைக் கொன்றனர். விஜயகலா மகேஸ்வரனின் கணவர் மகேஸ்வரனைக் கொன்றனர்?
மகேஸ்வரனைக் கொன்றது ஈ.பி.டி.பி என்று கண்டறியப்பட்டு அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி: அப்பொழுது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தை குமார் பொன்னம்பலத்தை கொன்றது யார்? அவரை சந்திரிகாவின் விசேட படையணி தான் கொன்றது.
கேள்வி: அப்படியாயின் ரவிராஜைக் கொன்றது யார்?
ரவிராஜ் கொல்லப்பட்டதும் அவ்வாறு தான்.
கேள்வி: இல்லை இல்லை சரியாக சொல்லுங்கள். அவரைக் கொன்றது யார்?
கடற்படை முகாமில் இருந்து வந்து தான் ரவிராஜ் சுடப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.
கேள்வி: அப்பொழுது லக்ஷ்மன் கதிர்காமரைக் கொன்றது யார்?
புலிகள் செய்ததாகக் கூறப்படுகின்றது.
கேள்வி: நீலன் திருச்செல்வத்தினைக் கொன்றது யார்?
புலிகள் அமைப்பு என்று கூறப்படுகின்றது.
கேள்வி: மாத்தையாவைக் கொன்றது யார்?
உட்பூசல் காரணமாக வழங்கப்பட்ட தண்டனை அது.
கேள்வி: அப்படியானால் புலிகள் ஒன்றுமே செய்யவில்லை? அப்படி செய்யவே இல்லை என்று சொல்ல முடியாது. மாத்தையா இல்லை என்றும், அவர் கொல்லப்பட்டு விட்டார் என்றும் அவரது மனைவிக்கு அறிவிக்கப்பட்டது. மாத்தையாவின் மனைவி, பிள்ளைகள் என்னை சந்தித்திருந்தனர். அவரது புதல்வர் லண்டன் சென்று அரசியல் தஞ்சம் கேட்டிருந்தார். புலிகள் பலமாக இருந்த காலத்திலும் நான் அவர்களைப் பார்த்து அஞ்சவில்லை. 89 ஜுலை 13ம் திகதி யோகேஸ்வரனையும் அமிர்தலிங்கத்தை கொழும்பில் புலிகள் சுட்டுக் கொன்றனர். அதற்கு பின் 2004ம் ஆண்டு தேர்தலில் 22 எம்.பிக்கள் தெரிவான பின்னர் அல்பிரட் பிளேஸ் ஆனந்தசங்கரியின் அலுவலகத்திற்கு சென்று மாலை இட்டோம். பகிரங்கமாக. இது பத்திரிகைகளிலும் பிரசுரமானது. புலிகளுக்கு கோபம் வரும் என்பதனை அறியாமலா நான் செய்தேன். தெரிந்து கொண்டு தான் செய்தேன். நீங்கள் செய்வது சொல்வது எல்லாவற்றையும் ஏற்க முடியாது என்பதனை புலிகள் பலமாக இருக்கும் போதே நான் நிரூபித்திருந்தேன்.
கேள்வி: எனது கேள்விகளுக்கு நேரடி பதில் வேண்டும். புலிகள் இன்னும் இயங்குகின்றனரா? நீறு பூத்த நெருப்பாக உள்ளனரா? யாழ்ப்பாணத்தில் இன்னும் புலிகள் உள்ளனரா?
புலிகள் இப்பொழுது முழுமையாக இல்லை.
கேள்வி: அப்படியாயின் இயக்கச்சியில் நடந்த வெடிப்பு சம்பவம் பற்றி என்ன கூறப்போகின்றீர்கள்?
குற்றம் இழைக்கப்பட்டிருந்தால் அரசாங்கம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.
கேள்வி: கரும்புலிகள் தினத்தில் வெடிப்பு சம்பவம் ஏதேனையும் நிகழ்த்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்ததா?
அரசாங்கம் சொல்வது அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
கேள்வி: அன்று தானே நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள்? அரசியலமைப்பில் நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள் தனி நாட்டுக்கு இணங்க மாட்டோம் என்று?
இது தனி நாட்டுக் கதை அல்ல. இது பற்றி முன்னாள் ஜனாதிபதியும் குறிப்பிட்டிருக்கின்றார், குண்டு போட்டது தவறு தவறுதலாக நடந்தது என்று அவர் கூறியிருந்தார். அது போன்று சிலரும் இறந்தவர்களை நினைவுகூர உரிமை உண்டு என்று சொல்லியிருந்தனர். படையினரிடம் வரத் தயாராக காத்திருந்த மக்கள் மீது 13 குண்டுகளை வீசினர். இரண்டு கிராமசேவை அதிகாரிகள் இறந்து போயினர். சிறுவர்கள், வயோதிபர்கள் 147 பேர் உடல் சிதறிப் பலியாகினர். சிங்கள மக்கள் முஸ்லிம் மக்கள் தமது இறந்தவர்களை நினைத்து நினைவு கூரல் நடத்தும் போது நாங்கள் செய்வது தவறா?
கேள்வி: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தேவையில்லை தானே? பிரபாகரன் இறக்கவில்லை என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளாத போது ஏன் நினைவேந்தல் நடத்த வேண்டும்?
நினைவுகூரல் என்பது பிரபாகரன் இருந்தாலும் ஒன்று இறந்தாலும் ஒன்று. இறந்த மக்களுக்காக நினைவுகூரல் நடத்த எமக்கு உரிமை உண்டு.
கேள்வி: வடக்கில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான வாய்ப்பில்லை தானே?
வாய்ப்பில்லை. மக்கள் வெறுத்துப் போயுள்ளனர். ஆனால் அரசாங்கம் இவ்வாறு தொடர்ச்சியாக தவறான செயல்களை செய்யுமாயின் 3, 4 ஆண்டுகளில் ஆயுதப்போராட்டம் எழுச்சிப் பெற வாய்ப்பு உண்டு.
கேள்வி: யார் எழுச்சிப் பெறுவார்கள்? சிவாஜிலிங்கமா?
இல்லை. இல்லை. தமிழ் இளைஞர்கள் எழுச்சிப் பெற இடம் உண்டு. உதாரணம் ஒன்று கூறுகின்றேன். 1971ல் ஜே.வி.பி கிளர்ச்சி ஏற்பட்டது. 10 ஆயிரம் இளைஞர்கள் இறந்தும் காணாமற்போயினர். ஏன் 88, 89 ஆண்டுகளில் மீண்டும் அவர்கள் எழுச்சிப் பெற்றார்கள்? அதனால் தற்போது இராணுவ நிர்வாகம் ஏற்பட்டு, தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட்டு ஜனநாயகம் இல்லாமல் செய்யப்பட்டால் தெற்கிலும் அவ்வாறான ஆயுதப் பேராட்டம் ஒன்று ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு தான் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அடக்குமுறைக்குள்ளாகும் போது அவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படும் போது மீண்டும் அவ்வாறு நடக்காது என்று கூற முடியாது.
கேள்வி: தீர்வாக என்ன கேட்கின்றீர்கள்? சுயாட்சியா?
சுயாட்சி தான் கேட்கின்றோம்.
கேள்வி: சுயாட்சி என்பது தனி நாடு தானே?
ஒரு நாட்டிற்குள் சுயாட்சி உள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் வாழவே நாங்கள் எங்கள் விருப்பத்தினை பிரகடனப்படுத்தியுள்ளோம்.
கேள்வி: நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒற்றையாட்சி இலங்கையை தான் விரும்புகின்றார்கள்?
பிரயோசனமற்ற ஒற்றையாட்சி எதற்கு? லட்சக்கணக்கான மக்கள் உயிரை இழந்துள்ள நிலையில் ஒற்றையாட்சி என்பது பொய்யான வார்த்தை.
கேள்வி: தமிழ்க் கூட்டமைப்பு அவ்வாறான கூறுவதில்லையே?
அவர்கள் அரசாங்கத்தின் பின் சென்று துரோக வேலையை செய்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு என்ன தீர்ப்பினை வழங்கப்போகின்றார்கள் என்பதனை இந்த தேர்தலில் பாருங்களேன்.
கேள்வி: அப்படி உங்களுக்கு சுயாட்சி வழங்கப்போனால் கிழக்கில் ஹக்கீம், ரிசாட்டும் கேட்பார்கள்? வெள்ளவத்தையில் வேறாக கேட்பார்களே?
ஆணும் பெண்ணும் விவாகம் செய்யும் நாளிலேயே அவர்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமையும் கிடைக்கின்றது. அதற்காக அனைவரும் அப்படி செய்வதில்லையே. அதுபோல் தான் இதுவும். சுயாட்சி என்று வைத்துக்கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வது. ஒரு ஜனாதிபதி. ஒரு இராணுவம்.
கேள்வி: சுயாட்சி பற்றி கேட்கின்றீர்களே? வடக்கில் உள்ள சாதிப் பிரச்சினைக்கு உங்களால் தீர்;வு காண முடிந்ததா?
தெற்கில் உள்ளது போன்று அந்தளவுக்கு சாதிப் பிரச்சினை வடக்கில் இல்லை.
கேள்வி: வடக்கில் வெள்ளாளர் சாதியை தவிர மற்றைய சாதியினரை மதிக்கவே மாட்டார்கள் அல்லவா?
அப்பொழுது வெள்ளாளர் ஆட்கள் எப்படி கரவாய் பகுதியில் உள்ள பிரபாகரனை தலைவர் என்று எப்படி ஏற்றுக்கொண்டனர்?
கேள்வி: அது பிரபாகரன் மீதான அச்சத்தினால் தானே?
பயத்தினால் அல்ல நம்பிக்கையினால் ஏற்றுக்கொண்டனர். நான் ஒரு முறை சொல்லியிருந்தேன். செல்வநாயகம் அவர்கள் கிறிஸ்தவர். இந்து மக்கள் அதிகமானவர்கள் அவரை தலைவர் என்று தெரிவு செய்து கொண்டனர். பிரபாகரன் வெள்ளாளர் சாதியை சேர்ந்தவர் அல்லர். ஆனால் அவரை தலைவர் என்று ஏற்றுக்கொண்டனர். சம்பந்தன் அவர்களை தலைவராக சில காலம் ஏற்றுக்கொண்டனர். அவர் நயினைதீவு பகுதியை சேர்ந்தவர். அதனால் சாதி பேதம், மத பேதம் எதுவும் வடக்கில் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை.
கேள்வி: நீங்கள் ஒரு தமிழர். நீங்கள் தமிழராக இருப்பதனால் இந்நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினை ஒன்று பற்றி சொல்லுங்களேன் பார்;ப்போம்?
தமிழராக இருப்பதனால் தான் 58ல் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். 78ம் ஆண்டு நான் அரச சேவையில் இருந்த போது சிங்கள அடிப்படைவாதிகள் (அனைத்து சிங்கள மக்களும் கெட்டவர்கள் என்று நான் கூற வரவில்லை) ஆயிரக்கணக்கான மக்களை கொன்றனர். 1983லும் நடந்தது, அவ்வாறு எமக்கு நடந்த பிரச்சினைகள் பல உள்ளன.
கேள்வி: தமிழர் தாயகம் எங்கு இருக்கின்றது? மீண்டும் திம்பு உடன்படிக்கைக்கு தானே செல்கின்றீர்கள்? அதாவது சுயாட்சி அமைத்துக் கொண்டு தமிழர் தாயகத்தினை பிரகடனப்படுத்திக் கொண்டு வெள்ளவத்தையில் உள்ள தமிழ் மக்களையும் அழைத்துக்கொண்டு அங்கு செல்லப் போகின்றீர்களா?
வட்டுக்கோட்டை பிரகடனத்தில் வடக்கு கிழக்கில் வாழும் சிங்கள மக்களுக்கு அவர்கள் விரும்பினால் அங்கேயே வாழ முடியும் என்ற ஒரு பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமமான உரிமை அவர்களுக்கு வழங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. சரி தமிழீழம் கிடைத்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது தென்னிலங்கையில் உள்ள தமிழர்கள் 10 சதவீதமானாவர்கள் வடக்குக்கு செல்ல விரும்புவார்கள். மற்றைய 90 வீதமானவர்கள் கொழும்பில் இருக்க விரும்புகின்றார்கள் என்றால் அது அவர்களின் தீர்மானம். அதற்காக எவரும் அழுத்தம் கொடுக்க மாட்டார்கள்.
கேள்வி: முள்ளிவாய்க்காலில் 14 ஆயிரம் மக்களை பாதுகாத்த உலகின் பாரியதொரு மனிதாபிமான நடவடிக்கையை பற்றி பாராட்ட உங்களுக்கு மனமில்லை தானே? மூதாட்டிகளை படையினர் தமது கரங்களில் ஏந்திக்கொண்டல்லவா வந்தனர்?
யுத்தத்தை நிறுத்தவே நாம் முயற்சித்தோம். ஏனெனில் அதனால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பாதுகாத்திருக்க முடியும். கனடா அமெரிக்கா கொடுத்த மாற்று வழியை சம்பந்தன் பயன்படுத்த தவறிவிட்டார். அவர் அதனை சரியாக செய்யவில்லை. அமெரிக்கா கனடா நாடுகளுடன் இணைந்து நாம் எடுத்த முயற்சிகளின் பலனாக புலிகள் யுத்தத்தை நிறுத்த சம்மதம் தெரிவித்தனர். இந்த செய்தியை நடேசன் இந்தியாவிலிருந்து சம்பந்தனுக்கு வழங்கினார். இந்தியா ஏதாவது சொல்லுமா இல்லையா என்ற அச்சத்தில் சம்பந்தன் சிந்தித்துக் கொண்டே இருந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
கேள்வி: தமிழ்க்கூட்டமைப்பின் உண்மையான தலைவர் யார்? சம்பந்தனா? சுமந்திரனா?
சம்பந்தன் பெயரளவில் உள்ளார். சுமந்திரன் தான் நகர்வுகளை செய்கின்றார்.
கேள்வி: இறுதியாக ஒரு கேள்வி, நாட்டிற்கு துரோகம் செய்யும் ஒரு துரோகி தானே நீங்கள்?
இல்லை. நான் இலங்கைப் பிரஜை. இன்றுவரை நான் ஒரு நாட்டிற்குள் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கைக் கொண்டிருக்கின்றேன்.
கேள்வி: மறைத்துவைத்த ஆயுதங்கள் ஏதும் உள்ளனவா?
மக்கள் வெறுத்துப் போயுள்ளனர். அதனால் கனவில் கூட அஞ்சத் தேவையில்லை. இந்த நல்ல சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி நல்ல தீர்வை வழங்க வேண்டும். சரியாக ஆட்சி நடந்தால் நாட்டில் பிரிவினைப் பற்றி மக்கள் பேச மாட்டார்கள். சிங்கள பௌத்த மக்கள் 98 வீதமானவர்கள் நல்லவர்கள். தீயவர்களே நாட்டை அழிவுப்பாதையை நோக்கி வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தடுக்காவிடின் நாடு இரண்டு, மூன்று அல்ல நான்காகவும் பிளவுப்படக் கூடும். அதற்கான முழுப்பொறுப்பினை அவர்களே ஏற்க வேண்டும். இதுவே என் கருத்து. நாங்கள் உள்நாட்டில் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கி;றோம். அல்லது சர்வதேசத்தின் உதவியுடன் தீர்வு காண முயற்சிக்கின்றோம்.