April 26, 2024

இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண வழிகாட்டு குழு அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வு துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு, முன்னாள் படைவீரர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் பேணிடவும், அங்கு பாதிப்புக்கு உள்ளானோர்க்கு உதவிடவும், நாடு திரும்பிய வெளிநாடுவாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு துணை நிற்கவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற ஒரு புதிய துறையை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கை தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாண வழிகாட்டுதல் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு காப்பீட்டு திட்டம், அடையாள அட்டை,  கட்டணமில்லா தொலைபேசி உதவி மையம், குழந்தைகளுக்கு தமிழ் மொழியை இணைய வழியில் கற்பிப்பதற்கு தமிழ் இணைய கல்வி கழகம் அமைப்பது உள்ளிட்டவைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வழங்க வேண்டும்’’ என்றார். இந்த கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், பொது மற்றும் மறுவாழ்வு துறை செயலாளர் ஜகந்நாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.