Mai 4, 2024

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் வீராப்பு! சீன இராணுவமென்றால்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடையை ஒத்த சீருடையை அணிந்தவர்களை கைது செய்த இலங்கைச் சட்டம், இன்று சீன இராணுவத்தின் சீருடையை அணிந்தவர்களுக்கு எதிராக மௌனமாக இருப்பது ஏன் என அக்மீமன தயாரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீன இராணுவத்தைக் கொண்டு உள்நாட்டு வாவி ஒன்றை புனரமைக்கும் அதிகாரத்தை சமல் ராஜபக்சவிற்கு வழங்கியது யார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீன இராணுவ சீருடையை ஒத்த உடையணிந்து திஸ்ஸமஹராம வாவியில் சேற்று மண்ணை அகழும் சீன பிரஜைகள் தொடர்பாக கொழும்பின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

குறித்த இராணுவ சீருடையில் சின்னங்கள் மற்றும் குறியீடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளை இந்த உடையிலும் காண முடிந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த விடயம் இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிங்கள ராவய அமைப்பின் உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர், சீன இராணுவ சீருடையை ஒத்த உடையணிந்து திஸ்ஸமஹராம வாவியில் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் என்னவென அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்திற்கு அவர் தமது கடும் எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

சீன இராணுவத்தை இந்த நாட்டிற்கு எவ்வாறு வழரவழைத்தார்கள்? வேறு நாட்டு இராணுவத்தை உள்நாட்டு விடயங்களில் எவ்வாறு ஈடுபடுத்தினார்கள். இந்த நாட்டின் இறையாண்மை மற்றும் சுயாதீனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயமல்லவா இது? இதற்கு பொறுப்புக்கூறப்போது யார்?

இரு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடையை ஒத்த உடையை அணிந்து பணியாற்றிக்கொண்டிருந்தார்கள் என்ற காரணத்திற்காக, சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நாட்டின் பிரஜைகளை கைது செய்தார்கள். எனினும் சீன இராணுவத்தை நாட்டிற்கு அழைத்து வந்தவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஏன்? 69 இலட்சம் வாக்குகளை வழங்கி சமல் ராஜபக்சவிற்கு இந்த அதிகாரத்தை வழங்கப்பட்டுள்ளதா? என நாம் கேட்க விரும்புகின்றோம்.

இந்த நாட்டின் சட்டம் இன்று கேலிக்குரியதாக மாறியுள்ளது. சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள். சீனா இராணுவத்தை நாட்டிற்கு அழைத்து வந்தமை தவறு. வாவி ஒன்றை புனரமைக்கும் இயலுமை எமக்கில்லையா? சீனாவிற்கு இதனை எவ்வாறு ஒப்படைத்தார்கள்.

நாட்டில் பலர் ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாயை உழைத்துக்கொள்ளவே கஷ்டப்படும் இந்த நிலைமையில், தொல்பொருள் சட்டத்தை மீறி சீனர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்தப் பணிகள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் எடுத்த நடவடிக்கை என்ன? தொல்பொருள் சட்டத்தை மீறி, தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு எடுத்த நடவடிக்கை என்ன? நீர்ப்பாசனத் திணைக்களம் எடுத்த நடவடிக்கை என்ன? இது தொடர்பில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை என்ன? தற்காலிகமாக நியமனம் பெறும் அமைச்சருக்கு இதில் பொறுப்பில்லாமல் இருக்கலாம் எனினும், திணைக்களங்கள் இது தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டும்.

இதற்கு எதிராக மக்கள் ஒன்று திரளுவார்கள். கொரோனா தொற்றுக் காரணமாக மக்கள் வீதிக்கு இறங்கமாட்டார்கள் என நினைத்தால் அது தவறு என்றார்.