September 16, 2024

கொரோனா தடுப்பூசி வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவிப்பு! பெயர் ‘ஸ்புட்னிக்-5’

உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரசை தடுப்பதற்கான தடுப்பூசி, நேற்றுப் புதன்கிழமை காலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் திறம்பட செயல்படுகிறது என்று எனக்கு தெரியும். இது ஒரு நிலையான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார்.தடுப்பூசியானது, தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்டது. இந்த தடுப்பூசி ஆற்றல் மிக்கது என்பது சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது எனவும் தெரிய வந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தடுப்பூசியை எனது 2 மகள்களில் ஒருவர் போட்டுக்கொண்டார். அவருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டபோது உடல் வெப்ப நிலை 100.4 டிகிரி பாரன்ஹீட் இருந்தது. மறுநாளில் அவளது உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட்டாக குறைந்து விட்டது.

இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் அவருக்கு செலுத்தப்பட்டது. அப்போது அவரது உடல் வெப்ப நிலை லேசாக அதிகரித்தது. பின்னர் அது சரியாகி விட்டது. இப்போது அவர் நன்றாக இருப்பதாக உணர்கிறார். அவருக்கு நல்ல அளவில்நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளன என்றார்.

இந்த தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-5’ என்று ரஷ்யா பெயரிடப்பட்டுள்ளது. 1957 ஆம் ஆண்டு ரஷியாவில் ஏவப்பட்ட ஸ்புட்னிக்-1 விண்கலம், முதல் விண்கலம் என்ற வகையில் உலகம் முழுவதும் விண்வெளி ஆராய்ச்சியை தூண்டியது.

அதே போன்று உலகில் பதிவு செய்யப்பட்ட முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி என்ற வகையில் ‘ஸ்புட்னிக்-5’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இராணுவ அமைச்சும், கமலேயா தொற்றுநோயியல் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் சேர்ந்தே இதனை உருவாக்கியுள்ளனர்.

ரஷ்ய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ கூறும்போது,

தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து விட்டன. முதலில் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த தடுப்பூசியை பெறுவார்கள். அதைத் தொடர்ந்து பல கட்டங்களாக பொதுமக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும்.

முதலில் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தடுப்பூசியை வழங்க விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

இத்தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டியுடர்டே முன்வந்துள்ளார என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தடுப்பூசியை வாங்குவதற்கு உலக நாடுகள் பலவும் ஆர்வம் காட்டுகின்றன. 20 நாடுகளில் இருந்து இந்த தடுப்பூசியின் 100 கோடி ‘டோஸ்’களுக்கு ஆர்டர் கிடைத்துள்ளதாக ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரீவ் கூறினார்.

5 நாடுகளில் உள்ள தங்களது கூட்டாளிகள் மூலம் 50 கோடி தடுப்பூசி ‘டோஸ்’கள் தயாரிப்பை உறுதி செய்ய தயாராக உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து உற்பத்தியை மேலும் பெருக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.