September 13, 2024

ரூபனிற்கு விட்டுக்கொடுக்கங்கள்: சம்பந்தனிடம் கோரிக்கை?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் திருகோணமலையை நேசிப்பவராக இருந்து அதனை பாதுகாக்க விரும்பினால் தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கி துடிப்பும், ஆற்றலும், அறிவும் கொண்ட தனது தம்பி ரூபனுக்கு வழிவிட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“ரூபன் ஒரு வீரத் தமிழன். தன்மானத் தமிழன். ஆகையினால், ரூபனுக்கு நீங்கள் விட்டுக்கொடுப்பதன் மூலம் நீங்கள் தோற்க மாட்டீர்கள். மாறாக நீங்கள் வெல்வீர்கள். திருகோணமலை மக்கள் வெல்வார்கள். ஆகவே, நீங்கள் அவ்வாறு செய்தால், வரலாறு உங்களை புகழும். திருகோணமலை மக்கள் உங்களை போற்றுவார்கள். திருக்கோணேஸ்வர பெருமான் உங்களை ஆசீர்வதிப்பார்.” என்று நீதியரசர் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
எனது அன்புக்குரிய திருகோணமலை மக்களே,
கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு முறை திருகோணமலைக்கு வந்து உங்களை சந்தித்திருந்தேன். கடந்த 29 ஆம் திகதியும் அங்கு வந்து உங்களை சந்திப்பதாகத்தான் இருந்தது. ஆனால், தவிர்க்கமுடியாத காரணங்களினால் என்னால் அங்கு வரமுடியவில்லை. அதனால், இந்த அறிக்கை மூலம் உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
நடைபெறும் இந்த தேர்தல் கிழக்கு மாகாண மக்களைபொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது. இந்த தேர்தலை நீங்கள் சரியாக பயன்படுத்த தவறினால் அடுத்த பாராளுமன்ற தேர்தல் நடைபெறும்போது நாம் எமது நிலம் அடையாளம் ஆகியவற்றை எல்லாம் இழந்து அரசியல் அனாதைகள் போல் ஆகும் நிலையில் இருப்போம். இதனை நான் மிகைப்படுத்தி கூறவில்லை. உண்மை நிலை இதுதான்.
அம்பாறையையும், திருகோணமலையையும் ஏறத்தாழ முழுமையாக கபளீகரம் செய்துள்ள சிங்கள பௌத்த பேரினவாதம், இன்று மட்டக்களப்பை முழுவதுமாக விழுங்குவதற்கு திட்டங்களை வகுத்துள்ளது. தொல்பொருள் அடையாளம் இட்ட இடங்களாக 164 இடங்கள் ஆரம்பத்தில் குறிக்கப்பட்டிருந்தநிலையில் இன்று அவை 600 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல, திருகோணமலையில் எஞ்சியுள்ள தமிழர் நிலப்பரப்புக்களையும் கபளீகரம் செய்யும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, புல்மோட்டையில் தென்னைமரவடி மற்றும் குச்சவெளியில் ஏறாமடு ஆகிய இடங்களில் சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்படுகின்றன.
இவ்வாறு மேலும் பல இடங்களில் சிங்கள குடியேற்றங்கள் அண்மைக் காலப்பகுதியில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
1827 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த திருகோணமலையிலும் 18,000 (81சதவீதம்) தமிழ் மக்கள் வாழ்ந்தபோது 250 க்கும் குறைவான சிங்கள மக்களே வாழ்ந்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இன்று ஏறத்தாழ சிங்களவர்களின் எண்ணிக்கையும் தமிழ் மக்களின் எண்ணிக்கையும் ஒரே அளவு. முஸ்லிம்களின் எண்ணிக்கை எம்மை விட அதிகம். இன்னும் ஓரிரு வருடங்களில் நாம் சிறுபான்மையினர் ஆவோம்.
காலம்காலமாக நாம் பிதிர்கடன்களை நிறைவேற்றிவந்த கன்னியா வெந்நீரூற்றை சிங்கள பௌத்த பேரினவாதம் இன்று ஆக்கிரமித்துள்ளது. எமது புகழ்பெற்ற கோணஸ்வரர் ஆலயம் முன்னர் கோகன்ன விகாரையாக இருந்ததாக புதிய ஒரு கதையை தற்போது அவிழ்த்து விட்டுள்ளனர். இது கோணேஸ்வரர் ஆலயத்தில் கைவைக்கும் அவர்களின் எண்ணத்தைக் காட்டுகின்றது.
இன்று எமக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளமைக்கு காரணம் கடந்த 10 வருடங்களில் சரியான ஒரு அரசியல் தலைமைத்துவம் எமக்கு இல்லாமல் போனமையே ஆகும். 1977 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் சென்ற மறுவருடம் திருகோணமலையின் மூன்றில் இரண்டு நிலப்பரப்பை சேருநுவர என்ற புதிய பிரேதேச சபையாக உருவாக்கி பிரித்தெடுத்தார்கள். சம்பந்தன் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அலுவலகத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த போது கன்னியா வெந்நீரூற்று ஆக்கிரமிக்கப்பட்டு புல்மோட்டையில் சிங்கள குடியேற்றம் நிறுவப்பட்டது. பெரும்பான்மை பலம் பெற்றிருந்தும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது.
திருகோணமலையை பாதுகாப்பதற்கு சம்பந்தன் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதே உண்மையானது. 5 வருடங்களுக்கு முன்னர் பார்த்த பின்னர் தற்பொழுதுதான் சம்பந்தன் ஐயாவைத் தாம் காணுவதாக நான் கடந்த வாரம் அங்கு சென்றபோது பொதுமக்கள் என்னிடம் கூறினர்.
திருகோணமலை மாவட்டத்தில் தங்கி இருந்து அந்த மக்களின் குறைகளை அறிந்து எங்கெல்லாம் அநீதி இடம்பெறுகின்றதோ அங்கெல்லாம் சென்று அவற்றை தீர்க்கும் விருப்பமும் ஆற்றலும் உள்ள ஒருவரே திருகோணமலைக்கு இப்பொழுது தேவை.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் ரூபன் என்று அழைக்கப்படும் ஆத்மலிங்கம் ரவீந்திராவே அதற்கு தகுதியானவர். அரசியலில் தனது முகவரியை தொலைத்து நின்ற சம்பந்தனுக்கு மீண்டும் முகவரியை பெற்றுக்கொடுத்ததுகூட ரூபனே. தம்பி பிரபாகரனினால் சிறந்த ஆளுமையும் நிர்வாக திறனும் கொண்டவர் என்று அடையாளம் காணப்பட்டவர் ரூபன். பல பொறுப்புக்களை நிழல் அரசாங்கத்தில் வகித்து அரசியல், பொருளாதார ரீதியாக அளப்பெரும் சேவைகளை அவர் செய்துள்ளார்.
திருகோணமலை மக்களே! ரூபன் உங்களுக்காக உயிரையும் துச்சமாக மதித்து போராடியவர். உங்களுக்காக உங்களோடு வாழ்ந்தவர். அவர் உங்களுக்கு புதியவரல்ல. அறிவாற்றல், நிர்வாகத்திறன் தேசப்பற்று, எளிமை, துடிப்பு போன்ற நற்பண்புகளும் பலதிறமைகளும் ஒருங்கே அமைந்தவர். ரூபன் திருகோணமலையை பாதுகாப்பார். அவரை நீங்கள் நம்புங்கள். அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். நீங்கள் ஏமாறமாட்டீர்கள். ரூபனை மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள். “இனியொரு விதி செய்வோம். அதை எந்நாளும் காப்போம்” என்ற பாரதியின் வரிகளுக்கு செயல்வடிவம் கொடுக்க முன் வாருங்கள்.
இறுதியாக சம்பந்தன் அவர்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன். தயவுசெய்து கடந்த காலத்தில் நீங்கள் விட்ட தவறுகளை உணர்ந்து உங்களுக்கு மீண்டும் அரசியல் முகவரியை பெற்றுக் கொடுத்த உங்கள் தம்பி ரூபனுக்கு வழிவிடுங்கள். உங்களால் செய்யமுடியாதவற்றை உங்கள் தம்பி செய்வார்.
தமிழ் மக்களின் தலைநகரமும் எங்கள் பூர்வீக பூமியுமான திருகோணமலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களாயின் போட்டியில் இருந்து ஒதுங்கி ரூபனுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள். உங்களுக்கு நன்றாக தெரியும் உங்களைவிடவும் திருகோணமலையை பாதுகாப்பதற்கு ரூபன் தான் பொருத்தமானவர் என்பது. ரூபன் ஒரு வீரத் தமிழன். தன் மானத் தமிழன். ஆகையினால், ரூபனுக்கு நீங்கள் விட்டுக்கொடுப்பதன் மூலம் நீங்கள் தோற்க மாட்டீர்கள். மாறாக நீங்கள் வெல்வீர்கள். திருகோணமலை மக்கள் வெல்வார்கள். ஆகவே, நீங்கள் அவ்வாறு செய்தால், வரலாறு உங்களைப் புகழும். திருகோணமலை மக்கள் உங்களைப் போற்றுவார்கள். திருக்கோணேஸ்வர பெருமான் உங்களை ஆசீர்வதிப்பார்.
நான் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு காரணமாக இருந்தவர் நீங்கள் தான் என்பதை நான் மறக்கவில்லை. உங்கள் மீது என்றும் எனக்கு மரியாதை உண்டு. ஆனால், இந்த நாட்டில் தமிழ் மக்களின் இருப்பையும் அவர்களின் உரிமைகளையும் முதன்மைப்படுத்தி உங்களை எதிர்த்து அரசியல் செய்யும் ஒரு நிலைமையினை காலம் எனக்கு வகுத்திருக்கிறது. என் கடமைகளில் இருந்து சரியமாட்டேன் என்றுள்ளார்.