April 27, 2024

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கை விலகாமல் இருந்திருந்தால் நான் வீட்டுக்கு சென்றிருப்பேன் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கைகளில் இருந்து விலகாமல் இருந்திருந்தால் முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும் நான் நிம்மதியாக வீடு சேர்ந்து என் ஓய்வு வாழ்க்கையைத் தொடர்ந்திருப்பேன்”

இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திக்கம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“அண்மைக் காலங்களில், அதுவும் 2009ன் பின் நாங்கள் ஏனோ மாறிவிட்டோம். இனி எல்லாம் முடிந்து விட்டது என்ற எண்ணமா? எனதருமை மக்களே! எதுவுமே முடியவில்லை.

நியாயமான தீர்வு பெறும் வரையில் மீண்டும் மீண்டும் எமது தமிழ்ச் சமூகம் கிளர்ந்தெழும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கைகளில் இருந்து விலகாமல் இருந்திருந்தால் முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும் நான் நிம்மதியாக வீடு சேர்ந்து என் ஓய்வு வாழ்க்கையைத் தொடர்ந்திருப்பேன்.

கொள்கை பிறழ்வு எந்தளவுக்கு ஒரு அசம்பாவிதத்தை, அழிவை எம் மக்களுக்குக் கொண்டு வரப் போகின்றது என்பதை உணர்ந்தே நான் என் பயணத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தெந்தக் கொள்கைகளைப் புறக்கணித்ததோ அவற்றை நாம் இப்பொழுது ஏந்திச் செல்கின்றோம். மொத்தத்தில் இன்றைய கூட்டமைப்பு என்று அழைக்கப்பட வேண்டியது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியையே.

தம்பி பிரபாகரனால் தொடங்கப்பட்ட கூட்டமைப்பானது கொள்கைகளை விட்டு மரணப் படுக்கையில் இப்போது தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.

அவர்களை இத்துடன் வெளியேற இடம் விடுங்கள் என்பதே நாம் எம் மக்களிடம் விடும் கோரிக்கை. கொள்கைப் பற்றுள்ள தேசியக் கூட்டணியை கூட்டமைப்பின் இடத்தில் நிறுத்துங்கள் என்று எம் மக்களிடம் பணிவுடன் வேண்டுதல் விடுக்கின்றேன்.

ஆகவே நான் இன்று உங்கள் முன் வந்திருப்பது மீன் சின்னத்திற்கு வாக்குக் கேட்பதற்கு. சோழக் கொடி மௌனிக்கப்பட்டதால் இனி மேல் பட்டொளி வீசிப் பறக்கப்போவது பாண்டிய கொடியான மீன் கொடியே.

மீன்கொடிக்கு உங்கள் வாக்குகளை இட்டு எமது உறுப்பினர்களுக்குப் நாடாளுமன்றம் செல்ல ஒரு அவகாசம் தாருங்கள். மக்கள் மீது அன்புடன் பற்றுறுதியுடன் கொள்கைகளின் அடிப்படையில் நாம் செயல்படுவோம்” என்று கூறியுள்ளார்.