Mai 17, 2024

தேசிய தலைவரை சந்திக்க மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் விரும்பினார்களாம்

யுத்த காலத்தில் மல்வத்து பீட மகாநாயக்க தேரர் ஆறு தடவைக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை சந்திக்க இலங்கை அரசாங்கம் ஊடாக முயன்றதாகவும் ஆனால் அந்த விடயம் கைகூடவில்லை என தெரிவித்ததாக உலக தமிழர் பேரவையின் தலைவர் சுரேந்திரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தந்து பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம் அதேபோல சர்வமத தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தோம்.

அவர்களை சந்தித்து ஒரு அரசியல் தீர்வு அதாவது தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்ற விடயத்தையும், நடந்த போர் குற்றங்கள் போன்றவற்றுக்கு பொறுப்பு கூறல் ஒரு முக்கியமான விடயம் என்றும், வெளிநாடுகளின் பிரேரணைகளை நிறைவேற்ற வேண்டியது ஒரு முக்கியமான விடயம் என்பது போன்ற பல்வேறு விடயங்களை அடக்கியதாக ஒரு பிரேரணையொன்றை நாங்கள் ஜனாதிபதி மற்றும் ஏனையோரிடம் கையளித்திருக்கின்றோம்.

அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மதகுருமார்களுடன் ஒன்று சேர்ந்து 25 மாவட்டங்களுக்கு சென்று இந்த பிரச்சனைளுக்கு தீர்வினை ஒன்றிணைந்து மக்களாக கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களது அடிப்படை நோக்கம்.

அரசியல்வாதிகளை சந்திப்பதன் நோக்கம்,அரசியல்வாதிகளுக்கு இப்படியான வேலை திட்டத்தை நாங்கள் செய்கின்றோம் என்பதனை வெளிப்படையாக கூறி இதற்கு குறை கூறக்கூடாது அல்லது குறை கூறும் அமைப்பாக எங்களை பார்க்கக் கூடாது. குறிப்பாக அரசாங்கத்தினுடைய வேலை திட்டம் அல்லது பௌத்தர்களுடைய வேலை திட்டம் என குறை கூறக்கூடாது என்பதற்காக நாங்கள் அரசியல்வாதிகளுக்கும் திட்டத்தினை தெளிவாக கூறுவோம்.

மக்கள் மயப்படுத்துவதே நோக்கம் அதாவது மக்களே தீர்ப்பு கூற வேண்டும் என்பது எமது நோக்கம். அரசியல்வாதிகள் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளையும் சந்திக்கவுள்ளோம். அதாவது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தவிர ஏனையோரை சந்திக்கவுள்ளோம்.

பலதரப்பட்ட சமூகத்தினரை சந்தித்து வேலை திட்டத்தினை மக்கள் மயப்படுத்தி மக்கள் மத்தியில் வருகின்ற தீர்வுகள் தான் நிரந்தரமாக இருக்கும் என நாங்கள் யோசிக்கின்றோம்.

குறிப்பாக அஸ்கிரிய பீடத்தினை நாங்கள் சந்தித்தபோது பல விடயங்களை கூறினர். அதாவது சகோதரத்துவம் சமதர்மம் சமாதானம் என்ற அடிப்படையில் வேலை செய்தால் இலங்கை என்ற நாட்டில் பிரச்சனைகள் இருக்காது அப்படி அரசியல்வாதிகள் செய்வதில்லை நீங்கள் இப்படி மக்களிடம் செல்லப்போவதை தான் வரவேற்பதாகவும் நிச்சயமாக உறுதுணையாக இருப்போம் எனவும் அதனைத் தாம் வெளிப்படையாகவே கூறுவதாகவும் அதற்குத்தான் ஆதரவு தருவதாகவும் கூறினர்.

அதேபோல மல்வத்துபீட மகாநாயக்க தேரர் ,போர்க்காலத்தில் கூட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை சந்திப்பதற்காக ஆறு தடவை அப்போதைய அரசாங்கங்களை கேட்டதாகவும் அரசாங்கம் விடாதிருந்தபோது ஆறாவது தடவையாக தான் வவுனியா வரை பிரபாகரனை காண வேண்டும் என்று தான் வந்ததாகவும் ஆனால் அது கைகூடவில்லை.

போர்க்காலத்தில் கூட ஒரு தீர்வைக் கொண்டு வர வேண்டும் சமாதானத்தை கொண்டு வர வேண்டும் என்ற விடயத்தில் தாங்கள் ஈடுபட்டதாகவும் இப்படி மக்கள் மயமாகி அரசியல்வாதிகளை தவிர்த்து மக்கள் மூலமாக ஒரு தீர்வு வருகின்ற நோக்கம் ஒரு நல்ல நோக்கம் தான் அதை ஆதரிப்பதாகவும் அதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறினார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் கிளிநொச்சி திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் மல்வத்துபீட தேரர்கள் பல பணிகளை செய்ததாக புகைப்படங்களையும் தேரர் காட்டினார் – என்றார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert