Mai 10, 2024

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் இடப்பெற்றுள்ளது!

திருகோணமலை மாவட்டத்தில் அரச காணிகள் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு வழங்கப்படும்போது அது குறித்த விடயங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறும் அரச காணிகள் வழங்கப்படுகையில் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும் என திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துகோரால தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

தற்போது நிலவும் கடும் உஷ்ணமான காலநிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இது குறித்து ஆராய்ந்து மாணவர்களின் குடிநீர் பிரச்சினை தற்காலிகமாக தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். அத்துடன் இக்காலப்பகுதியில் குறிப்பாக மாணவர்களை திறந்த வெளியில் வைத்துக்கொண்டு கூட்டங்கள் உட்பட ஏனைய செயற்பாடுகளை நடாத்துவதை தவிர்ப்பது குறித்து உரிய அதிகாரிகளை அறிவுறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

மாவட்டத்திற்கு நல்ல வேலைத்திட்டங்கள் வருகின்றபோது அதனை கொண்டு வருபவர் எந்த இனத்தை சேர்ந்தவர் என நோக்காது அத்திட்டத்தினால் மாவட்டத்திற்கு நலன் கிடைக்கப்பெறுமானால் அதனை உரிய நியமங்களை பின்பற்றி நடைமுறைப்படுத்த அதிகாரிகள் செயற்படல் வேண்டும். அவை குறிப்பாக பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்படல் மூலம் சாதகமான விளைவுகளை பெற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் அரச நெல் கொள்வனவு வேலைத்திட்டம் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு நிறைவுக்கு வந்துள்ளது.மொத்தமாக 4541 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டன. இவை அரிசியாக குற்றப்பட்டு வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு குடும்பமொன்றுக்கு 10 கிலோ அரிசி என்றடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. மார்ச் மாதத்திற்கான அரிசி விநியோகம் 99 வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத அரிசி விநியோகம் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்தார்.

காணி, வனப்பாதுகாப்பு, யானை வேலி அமைத்தல், நீர்ப்பாசனம், மாவட்ட வெசாக் வைபவத்தை நடத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் அது குறித்த முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அரசியல் தலைமைகள், திணைக்கள தலைவர்கள், முப்படை பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
திருமலை நிருபர் சூரியா

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert