April 26, 2024

விடுதலைப் புலிகள் மீதான அமெரிக்க தடை தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல- அமெரிக்க குழு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான அமெரிக்க தடையானது தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாடு அல்ல என தம்மை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அமெரிக்க தூதரகத்தின் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்க தூதரகத்தின் உதவி தூதுவர் டக்ளஸ் ஈ.சொனெக், அரசியல் மற்றும் பொருளியல் விவகாரங்களுக்கான அதிகாரி அனாமிகா சக்கரவர்த்தி ஆகியோர் நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்தனர். 

இவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான த. சித்தார்த்தன், சி. சிறீதரன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். 

இந்த சந்திப்பின்போது, கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருக்கின்ற அரசமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வெளிநாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலைமையே நாட்டில் உள்ளது என தெரிவித்தனர். 

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. இதனால், இந்தப் பிரதேசங்கள் பொருளாதார நிலையிலும் பின்தங்கியுள்ளன. தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு நல்லிணக்கம் நாட்டில் சாத்தியமாகாது என தெரிவித்த கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமெரிக்க அரசாங்கம் போர் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விதித்திருந்த தடை தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். 

இந்நிலையில், இவர்களுக்கு பதிலளித்த அமெரிக்க தூதுக் குழுவினர், புலிகள் மீதான தடை பொதுமக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக விதிக்கப்பட்டது. இது தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாடு அல்ல எனவும் வடக்கு – கிழக்கின் அபிவிருத்திக்கு அமெரிக்கா முழுமையான ஆதவரளிக்கும் எனவும் உத்தரவாதமளித்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert