April 28, 2024

வவுனியாவில் புதிய பொலிஸ் நிலையங்கள்

வவுனியா சிதம்பரபுரம், நெளுக்குளம் பகுதிகளில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண்கள் இரண்டு பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.

பொதுமக்கள் முறைப்பாடுகள் வழங்கும் செயல்முறையை இலகுவாக்குவதற்காக நாடு முழுவதும் 197 புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர் தெரிவித்திருந்தார்.

அதன்படி வவுனியா சிதம்பரபுரம் மற்றும் நெளுக்குளம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரண்கள் புதிய பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்டிருந்த வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மாஅதிபர் சஞ்சீவ தர்மரத்தின புதியபொலிஸ் நிலையத்தினை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

அத்துடன் நிகழ்வில் வன்னிமாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லால்செனவிரத்தின பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் சில்வா, வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மானவடு, உட்பட பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் இதன்போது வறுமைக்கோட்டிற்குட்பட்ட 20 குடும்பங்களிற்கு பொலிசாரால் நிவாரண உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், மாற்றுவலுவுடைய சிறுவன்

ஒருவருக்கு சக்கரநாற்காலியும் வழங்கிவைக்கப்பட்டது.