Mai 7, 2024

உலகின் மலிவு விலை ஏ.சி.யை கண்டுபிடித்துள்ள இவர்கள்தான் நிஜ பவர்ஸ்டார்கள்!

கொளுத்தும் இந்த வெயில் காலத்தில் எல்லாருக்கும் ஏ.சி அவசியமாகிறது. அந்த ஏ.சிக்கள் தற்போது இருக்கும் ஏ.சிக்களை விட பத்து மடங்கு செலவு குறைப்பதாக இருந்தால்? அதாவது ஒரு மணி நேரத்திற்கு 2,400 வாட் மின்சாரத்திற்கு பதில் வெறும் 250 வாட் மின்சாரம் மட்டுமே உபயோகிப்பதாக இருந்தால்? இத்தனை நாள் 5000 கரண்ட் பில் கட்டிவந்த நீங்கள் இனி 500 ரூபாய் தான் கட்டுவீர்கள். போதாக்குறைக்கு அந்த ஏ.சி சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதது. கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா நடைமுறையில் சாத்தியமா? என்ற உங்களின் கேள்வி எனக்கு கேட்கிறது.

image

சாத்தியம்தான் என நிரூபித்திருக்கிறார்கள் பிரணவ்-பிரியங்கா தம்பதி. ‚வாயு‘ என அவர்கள் பெயர் வைத்திருக்கும் இந்த தொழில்நுட்பம் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான், ராஜ்ஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டு போராட்டத்திற்கு பின் அக்டோபர் 2014-ல் இறுதி வடிவத்தை அடைந்தது இந்த தொழில்நுட்பம்.

‚Vaayu Hybrid Chillers‘ என்ற இந்த தொழில்நுட்பத்திற்கு மத்திய பிரதேச அரசு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது. இந்த நிறுவனம் இன்டோரில் சொந்தமாக இரண்டு பிளான்ட்களை வைத்திருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட முறை பரிசோதித்து வெற்றி அடைந்த பின்னர் தற்போது இந்த நிறுவனத்திற்கு ஏராளமான ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, உத்தராகண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் இந்த நிறுவனம் கிளை பரப்பியுள்ளது.

‚இது முற்றிலும் புதுமையான தொழில்நுட்பம் என்பதால் வாடிக்கையாளர்கள் குளிர்ந்த காற்றை அனுபவிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற ஏராளமான டீலர்களை நியமித்துள்ளோம்‘ என்கிறார் பிரணவ்.

image

எப்படி சாத்தியம்?

பிரணவ்-பிரியங்கா ஒவ்வொரு தடவை வாயு பற்றி பிரஷன்டேஷன் அளித்தபோதும் அவர்களுக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. ‚நாங்கள் ஒருமுறை எங்கள் திட்டத்தை ஆய்வாளர்கள் குழு முன் சொல்லியபோது எங்கள் திட்டம் தெர்மோடைனமிக்ஸ் விதிகளுக்கு அப்பாற்பட்டது என சொல்லி நம்ப மறுத்தார்கள்‘ என்கிறார் பிரியங்கா.

வாயு எப்படி செயல்படுகிறது? வாயு சில்லர் ஆன் செய்யப்பட்ட உடன், கம்பரஷர் இயங்கத் தொடங்குகிறது. ரெஃப்ரிஜிரேட்டர் நீரை குளிர்ச்சியாக்குகிறது. இந்த நீர் பம்பகளின் உதவியோடு பேட்களை சென்றடைகிறது. அங்கே சூடான காற்றோடு இந்த நீர் மோதும்போது காற்றில் உள்ள மூலக்கூறுகள் தங்கள் வெப்பத்தன்மையை இழக்கின்றன. பேட்களில் அளவாய் நீர் தேங்குமாறு தெர்மோஸ்டாட் பார்த்துக்கொள்கிறது. கன்டென்சர் ரெஃப்ரிஜிரன்ட்டை குளுமையாக்குகிறது. அந்தக் சில் காற்றுதான் வெளியே வருகிறது‘ என விலாவரியாய் விளக்குகிறார் பிரணவ்.

சுருக்கமாகச் சொன்னால் ஏசியில் வருவது போன்ற நடுங்க வைக்கும் குளிர் இதில் இல்லை. நம்மைச் சுற்றியுள்ள வெப்ப அளவைக் குறைக்கிறது.

வாயு சில்லர்ஸ் பார்ப்பதற்கு ஏசி போலத்தான் இருக்கிரது. ‚நாங்கள் சமீபத்தில் VAAYU MIG 24 என்ற புதிய கருவியை லான்ச் செய்தோம். இது 1000 சதுர அடி இடத்தை வெறும் 800 வாட் உட்கொண்டு குளுமையாக்கும்‘ என்கிறார் பிரணவ்.

image

வரும் நிதியாண்டில் மேலும் பத்து மாநிலங்களுக்கு தங்கள் நிறுவனத்தை விரிவுபடுத்த இருக்கிறார்கள். ‚அடுத்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் தொடங்கிவிடுவோம். அதற்கேற்றார்போல் மெக்ஸிகோ, ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எங்களுக்கு அழைப்புகள் வருகின்றன. போதுமான நிதி முதலீட்டிற்காக காத்திருக்கிறோம்‘ என்கிறார் பிரணவ்.

பவர் ஜோடி

பிரியங்கா திருமணத்திற்கு பின் தனது முதுகலை படிப்பை முடித்தார். பிரணவ் காமர்ஸ் பட்டதாரி. HVAC-ல் டிப்ளமோ முடித்திருக்கிறார். சாம்சங். எல்.ஜி போன்ற நிறுவனங்களில் 14 ஆண்டுகள் வேலை பார்த்த அனுபவம் இருக்கிறது அவருக்கு. டெக்னாலஜியில் இருந்த அதீத ஆர்வம் காரணமாக 2008-ல் ஏசி விற்பனை மற்றும் சர்வீஸ் மையத்தை தொடங்கினார். மறுபுறம் பிரியங்கா மார்க்கெட்டிங்கில் எம்.பி.ஏ முடித்து பி.ஹெச்.டியும் முடித்தார். ஆய்வுத்தாள்கள் எழுதுவதோடு லெக்சர்களும் கொடுக்கத் தொடங்கினார்.

‚தொடக்கத்தில் பிரணவின் அலுவலகம் அவரது வீடுதான். ஒரு முறை ஏ.சி கட்டணம் எகிறிவிட பிரணவின் தந்தை கோபமடைந்தார். இதனால் கூலரின் உள்ளே கம்ப்ரஸர் பொருத்த முயற்சி செய்கிறேன் எனக் கூறி பணிகளை தொடங்கினார். முதலில் அது வழக்கம் போல அவர் செய்யும் ஒரு பரீட்சார்த்த முயற்சி என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்படி சொந்தமாக ஒரு தொழில்நுட்பத்தையே கண்டறிவார் என எதிர்ப்பார்க்கவில்லை‘ என்கிறார் பிரியங்கா.

image

ஒரு பொருளை மார்க்கெட்டிங் செய்வதற்கான அவசியத்தை அறிந்திருக்கிறார் பிரணவ். ‚அதிக பணத்தை பெற்றுக்கொண்டு காப்புரிமையை விற்றிருக்க முடியும். ஆனால் பணம் சம்பாதிப்பது மட்டுமே எங்கள் குறிக்கோள் இல்லை‘ என கூறுகிறார் பிரணவ்.

‚நாங்கள் கடந்து வந்த தூரத்தை பார்க்கையில் வியப்பாக இருக்கிறது. திருபாய் அம்பானியின் வார்த்தைகளை அடிக்கடி நினைவு கூர்வோம். ‚பிரம்மாண்டமாக யோசியுங்கள். விரைவாக யோசியுங்கள். மற்றவர்களைவிட ஒரு படி மேலே யோசியுங்கள். கருத்துகள் யாருக்கும் சொந்தம் இல்லை‘ என்ற வார்த்தைகளே அவை‘ என்கிறார் பிரியங்கா.

யுவர்ஸ்டோரி வழங்கிய Mega Launchpad-ஐ வென்றது வாயு. Skoch நிறுவனத்தின் விருதுகளை சமீபத்தில் வென்றுள்ளது இந்த நிறுவனம். மத்திய பிரதேச அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஐந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுள் இந்த நிறுவனமும் ஒன்று.

இணையதள முகவரி: Vaayu India 

ஆக்கம்: முக்தி மஸி | தமிழில்: சமரன் சேரமான்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

‚பிரச்னைக்கான தீர்வே எங்களின் கண்டுபிடிப்புகள்’– தமிழக இளம் விஞ்ஞானிகள் பவித்ரா, இலக்கியா

18 வயது விஞ்ஞானி கரண் ஜெரத்தின் கண்டுபிடிப்பு மற்றும் புதுமை!

மதுரையை சேர்ந்த விஜயராகவன் விவசாயத்திற்கு உருவாக்கிய புதிய கருவி!