Mai 10, 2024

டிரம்பின் பேச்சு… நேரலையை பாதியில் நிறுத்திய அமெரிக்க ஊடகங்கள்

தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப் உரையாற்றியபோது, பிரபலமான பல்வேறு அமெரிக்க ஊடகங்கள் நேரலை ஒளிபரப்பை திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறார் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், வெற்றியின் விளிம்பில் இருக்கிறார்.

தற்போதுவரை ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகள் பெற்றுள்ளார். மேலும், ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவதற்கு இன்னும் 6 வாக்குகள் மட்டுமே தேவை.

இந்த நிலையில் சுமார் 36 மணி நேர மெளனத்திற்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டிரம்ப் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தார்.

இதனை அனைத்து செய்தி ஊடகங்களும் நேரலையாக ஒளிபரப்பு செய்தன.

அப்போது பேசிய டிரம்ப், ஜனநாயக கட்சியினர் சட்டவிரோத வாக்குகளை பயன்படுத்தி தேர்தல் வெற்றியை எங்களிடம் இருந்து திருட முயற்சிக்கிறார்கள் என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சுமார் 17 நிமிடங்கள் தொடர்ந்து பேசிய டிரம்ப், திரும்பத் திரும்ப எதிர்க்கட்சி மீது குற்றச்சாட்டை கூறினார்.

இதனால் அதிருப்தி அடைந்த பல்வேறு அமெரிக்க ஊடகங்கள் நேரலையை பாதியில் நிறுத்தி விட்டன.

டிரம்ப் தவறான தகவல்களை பரப்புவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் சுமத்துவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி டிரம்ப் பேட்டியின் நேரலையை ஊடகங்கள் திடீரென நிறுத்தியது அமெரிக்க மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.