கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகள் கொரோனாவை ஓரளவு கட்டுப்படுத்துகிறது.

இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து இந்தியாவிடம் அதிகம் உள்ளது.

அமெரிக்கா இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை தங்கள் நாட்டிற்கு அனுப்பும்படி இந்தியாவிற்கு கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பில் நேற்று டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவிக்கையில்,

“நான் நேற்று பிரதமர் மோடியிடம் பேசினேன், இந்தியாவில் மலேரியாவை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து அதிகம் உள்ளது. அவர்கள்தான் உலகில் மிக அதிகமாக ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை உற்பத்தி செய்வது. அதனால் அவர்கள் அமெரிக்காவிற்கு உதவி செய்ய வேண்டும்.

அவர்களிடம் 1.5 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அதிகம் உற்பத்தி செய்ய கூறியுள்ளோம்.

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய சொல்லி இருக்கிறேன். இந்தியா எங்களுக்கு ஏற்றுமதி செய்யும் என்று நம்புகிறேன்” என்று அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டு இருந்தார்

ஆனால் இந்த மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்து இருக்கிறது.

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் இந்திய மருத்துவ கழகம் சார்பாக கொரோனாவிற்கு எதிராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஓரளவு உதவுவதால் இந்தியா இதன் ஏற்றுமதியை தடை செய்துள்ளது.

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று தனது நிலைப்பாட்டை தெரிவித்தார்.

அதில், ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துக்கு இந்தியா தடை விதித்தது தெரியும். அது மற்ற நாடுகளுக்கு மட்டும்தான். ஆனால் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கும் அதே தடையை விதிப்பார் என்று சொல்ல முடியாது. மோடி அப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

அமெரிக்காவிற்கு மட்டும் இந்தியா இந்த தடையை நீக்க வாய்ப்புள்ளது.

நான் ஞாயிற்றுக்கிழமைதான் மோடியிடம் பேசினேன். அவர் மிக சிறப்பாக பேசினார். இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் குறித்து அவரிடம் நான் பேசி உள்ளேன். தொடர்ந்து ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்கிறதா என்று பார்க்கலாம். இனி வரும் நாட்களில் இந்தியாவின் நிலைப்பாடு தெரியும்.

நாங்கள் இந்தியாவுடன் நல்ல உறவை பேணி வருகிறோம். இந்தியா அமெரிக்காவை மதிக்கிறது. எங்களுடன் இந்தியா செய்துள்ள பொருளாதார ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும்.

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்தால் ஓகே. இல்லையென்றாலும் ஓகேதான்.

ஆனால் கண்டிப்பாக இந்தியா ஏற்றுமதியை தடை செய்தால் அதற்கான பதிலடி கொடுக்கப்படும். கண்டிப்பாக கொடுக்கப்படும், என்று கடுமையாக குறிப்பிட்டு உள்ளார்.