November 23, 2024

நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றவியல் குற்றச்சாட்டுக்களை வெளியிட உத்தரவு.

 

குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளியிடுமாறு, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

 

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகள் மற்றும் மேலதிக தகவல்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக 2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரூபதீசன் என்ற ஊடகவியலாளர் செய்த மேன்முறையீட்டை விசாரணை செய்த ஆணைக்குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

„அந்த தகவல் பொது நலனுடன் தொடர்புடையது. எனவே, இலங்கை நாடாளுமன்றத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடமிருந்து தேவையான தகவல்களைப் பெறுவதும், அந்தத் தகவலை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதும் பொது அதிகார சபையின் பொறுப்பாகும் என நாங்கள் கருதுகிறோம்.”

 

வாக்காளர்களுக்கு தாம் தெரிவு செய்த பிரதிநிதிகளின் கல்வித் தகுதிகள் மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுகள் பற்றி அறிய உரிமை உண்டு எனவும், ஏனெனில் அவர்கள் யாரை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பது பற்றி தகவலறிந்து, தீர்மானங்களை எடுக்கும் குடிமக்களின் உரிமையை உறுதி செய்வது அவசியம் என, 2002ஆம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றம் ‘இந்திய சங்கம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்’ ஆகியவற்றுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த விடயம், ஆணைக்குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்தத் தீர்ப்பில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கான இந்திய சட்டத்தில் உள்ள விதிமுறைகளின் குறைபாடுகளை சுட்டிக்காட்டிய இந்திய உச்ச நீதிமன்றம் பின்வரும் தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.

 

1. வேட்பாளர் ஏதேனும் குற்றவியல் குற்றத்திலிருந்து குற்றவாளியாக்கப்பட்டாரா/ விடுவிக்கப்பட்டாரா அவர் சிறையில் இருந்துள்ளரா? அல்லது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா?

 

2. வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் ஆறு மாதங்களுக்கு முன், இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய எந்தவொரு குற்றத்திற்காகவும் வேட்பாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா. அப்படியானால், அது குறித்த தகவல்,

 

3. ஒரு வேட்பாளரின் சொத்து விபரங்கள் மற்றும் அவரது/ அவளது துணை மற்றும் சார்புடையவர்களின் சொத்து விபரம் (அசையா, அசையும், வங்கி இருப்பு உள்ளடங்களாக)

 

4. செலுத்த வேண்டிய பணம், குறிப்பாக ஏதேனும் பொது நிதி நிறுவனம் அல்லது அரசுக்கு பணம் செலுத்த வேண்டியிருந்தால்.

 

5. வேட்பாளரின் கல்வித் தகுதிகள்.

கடந்த 2020ஆம் ஆண்டு வழக்கின் தீர்ப்பு ஒன்றில், வேட்பாளர்கள் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகளின் விபரங்களைப் பெறுவது அவர்களின் கடமை என இந்திய அரசியல் கட்சிகளுக்கு இந்திய நீதித்துறை நினைவூட்டிய விடயத்தை தகவல் அறியும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 

2016 ஆம் ஆண்டு 12ஆம் இலக்க தகவல் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5 (4)இற்கு அமைய, ஆணைக்குழு தனது உத்தரவில், „இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதால் ஏற்படும் தீங்கை விட பொது நலன் அதிகமாக இருந்தால் அத்தகைய தகவலுக்கான கோரிக்கையை மறுக்கக்கூடாது“ என வலியுறுத்தியுள்ளது.

இந்த விபரங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனியுரிமை தொடர்பானவை என நாடாளுமன்ற அதிகாரிகள் கூறியதை ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

 

சட்டத்தின் பிரிவு 5 (1) (அ) பிரிவின் வரம்புகள் இந்தத் தகவலுக்குப் பொருந்தாது எனவும் ஏனெனில் இது பொது நோக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது எனவும், இது எந்தவொரு நபரின் தனியுரிமையையும் மீறுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

 

„இந்தத் தகவலை குடிமக்களுக்குத் வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்திய நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளமைக்கு அமைய, „வெற்றிகரமான ஜனநாயகம் மற்றும் அறிவார்ந்த குடிமக்களை உருவாக்குகிறது“ எனக் கூறியுள்ள ஆணைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

 

இந்த தகவலை பெற்றுக்கொள்ளும் நோக்கில், „நீங்கள் இந்த தகவலை வழங்க விரும்பினால், உங்கள் கல்வி மற்றும் தொழில்முறையை எனக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” நாடாளுமன்ற பொதுச் செயலாளர் 10.05.2020 திகதியிட்ட ஒரு கடிதத்தை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

 

எனினும், இதுத் தொடர்பில் இதுவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட பதிலளிக்கவில்லை என்பது ஆணைக்குழுவிற்கு தெரியவந்துள்ளதாகவும், இது பொது நலனுக்கு அப்பாற்பட்டது என்பதால், இது கவலைக்குரிய விடயம் என ஆணைக்குழு சந்தேகத்திற்கு இடமின்றி வலியுறுத்தியுள்ளது.

கடிதத்திற்கு பதில் கிடைக்கும் பட்சத்தில், மேன்முறையீட்டுக்கும் உடனடியாக பதில் வழங்குவதோடு, ஆணைக்குழுவிற்கும் அதன் பிரதி ஒன்றை வழங்குமாறு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

 

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதிகளை தங்கள் இணையதளத்தில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த கம்மன்பில மற்றும் உறுப்பினர்களான சட்டத்தரணி கிஷாலி பிண்டோ-ஜயவர்தன, சட்டத்ததரணி எஸ்.ஜி புஞ்சிஹேவா, கலாநிதி செல்வி திருச்சந்திரன் மற்றும் நீதிபதி ரோஹிணி வல்கம ஆகியோர் முன்னெடுத்த மேன்முறையீடு குறித்த விசாரணைகளுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.