Mai 20, 2024

அன்புள்ள தமிழ் கட்சித் தலைவர்களே! (9th August) சர்வகட்சி அமர்வில் ஒரே குரலில் ஒத்த மனதுடன் பேசுங்கள் !

அன்புள்ள தமிழ் கட்சித் தலைவர்களே!
நாளை மறுதினம் (9th August) ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றுமொரு சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கவிருக்கும் நிலையில், பின்வரும் விடயங்களை கவனத்தில் எடுத்துக்கொள்வது உங்களுக்கும் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என நாம் கருதுகிறோம்.

கடந்த இருவாரங்களாக 13A திருத்தச்சட்டம் பற்றி பல்வேறு செய்திகள் கட்டுரைகள் மற்றும் காணொளிகள் வழியாக மக்கள் விழிப்புணர்வு கொண்டுள்ள இவ்வேளையில், இனி நடைபெற இருக்கும் ஜனாதிபதியுடனான கூட்டமும் கடந்த வாரம் நடந்தது போல் இழுபறியிலும் பலனற்றதாகவும் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வது உங்களின் கையிலேயே தங்கியுள்ளது.

ஜனாதிபதி ஏமாற்றப்பார்க்கிறார், நாடகம் நடிக்கிறார் என்று ஏனைய தென்பகுதிக் கட்சிகள் சொல்லிக்கொண்டாலும், தமிழர் தரப்பினராகிய நாங்கள் 13A. ஐ முழுமையாக நிறைவேற்றவேண்டும் என்ற விடயத்தில் விடாப்பிடியாகவும் பொறுமையுடனும் புத்திசாலித்தனமாகவும் நடந்துகொள்வது இன்றைய கட்டத்தில் முக்கியமானதாக இருக்கின்றது.

நாம் ஆரம்பித்த இவ்விடயத்தை இலகுவில் சோரம்போக விடாது, சில விட்டுக்கொடுப்புகளுடன் ஒரே குரலில் ஒத்த மனதுடன் பேசும்போது, ஜனாதிபதி இசைந்து வரத்தான் வேண்டும்.
இந்தியாவின் அழுத்தம் தெற்கிலுள்ள எந்தக்கட்சியினரதும் இனவாத, அரசியல் இலாபம் ஈட்டும் முயற்சிகளுக்கு இலகுவில் இடமளிக்காது. நாட்டின் பொருளாதார நிலைமை இதற்கு இடம் கொடுக்காது என்பதைப் புரிந்தவர்களாக, நாம் செய்யும் விடயங்களில் ஒருமனப்பட்டவர்களாக இருப்பதே நமது முதன்முதல் தேவையாக உள்ளது. குறிப்பாக மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் வைப்பதற்கு தென்பகுதியினர் விருப்பம் காட்டுகின்ற இவ்வேளையில், இதை எமக்கு சார்பாக பயன்படுத்தி இத்தேர்தல்களை விரைவில் வைப்பதற்கு ஒரு தேதியை நிச்சயிப்பது எமக்குப் பயன்தரவே செய்யும். பொலிஸ் அதிகாரங்களை சட்டமாக்கும்வரை தேர்தல் வேண்டாம் என்பது, ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரும் அதற்குப் பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுத்தராமல் போவதற்கான வாய்ப்புகளையே அதிகரிக்கும். ஈற்றில் இரண்டும் கெட்ட நிலையே ஏற்படும் என்பது நம் கணிப்பு.
பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீளச்சேர்ப்பதற்கான ‚ஆலோசனைச் சபை‘ தனது பணிகளைச் செய்யும் அதேவேளையில், தேர்தலை (குறைந்தது வடக்கு, கிழக்கிலாவது) நடத்துவது சம்பந்தமான அழுத்தங்களையும் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் கொடுப்பதே சிறந்ததென எண்ணத்தோன்றுகிறது.

இவ்விடயங்களை திறந்த மனப்பாங்குடன் கட்சிகளுக்குள் கதைத்துப் பேசி, ஓர் தெளிவான முடிவுடன் ஜனாதிபதியின் கூட்டத்திற்குப் போவதே எமக்கு கௌரவமானதாக இருக்கும்; தமிழ் மக்களுக்கும் அது பெருமை சேர்க்கும். ஜனாதிபதி எதையுமே செய்துமுடிக்க மாட்டார் என்று சொல்லி அவர்மீது எல்லாப்பழியையும் சுமத்திவிட்டு இருந்துவிடாதீர்கள்.
முற்சி திருவினையாக்கும் என்றும், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்றும், ஒற்றுமையே பலம் என்றும் நம் முன்னோர் சொல்லித்தந்தது எல்லாம் எதற்காக?
If I am not for myself, who will be for me? If I am not for others, what am I? And if not now, when?
Rabbi Hillel.
நன்றி

ராஜ் சிவநாதன்
சர்வதேச ஒருங்கிணைப்பாளர் (WTSL), மெல்போர்ன்
மின்னஞ்சல்: rajasivanathan@gmail.com
அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா, ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஐக்கிய அமெரிக்கா.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert