Mai 5, 2024

தென்னிலங்கை கட்சி உறுப்பினர்களை கூட்டணிக்குள் உள்வாங்க எதிர்ப்பு!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தன்னிச்சையாக மத்திய குழுவின் அனுமதியின்றி கடந்த காலத்தில் தென்னிலங்கை கட்சிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்த இருவரை கட்சியில் இணைக்க முயல்கிறார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின்மகளிர் பேரவை தலைவர் சூரியமூர்த்தி சூரியபிரதீபா வாசவன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் இலங்கையில் இல்லாத சமயத்தில் தலைவருக்கோ அல்லது கட்சியின் பெருமளவான மத்திய குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்காது இருவரை இணைப்பதற்காக வவுனியாவில் சட்டவிரோதமாக மத்திய குழுக்கூட்டத்தை நடாத்தியுள்ளார். இதற்கு எதிராக நாம் நடவடிக்கை எடுப்போம். 

எனது தந்தையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை முன்னாள் நகர பிதாவுமான சூரியமூர்த்தி 2004ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தேன். 

ஆனாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியை மறுசீரமைப்பு செய்வதற்காக 2022 கட்சியின் பொதுக்குழுவின் அங்கீகாரத்துடன் மகளிர் பேரவை தலைவராக தெரிவானேன்.தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு கடும் எதிர்ப்பு கட்சிக்குள் ஏற்பட்ட போது சிரேஷ்ட தலைவர், எனது தந்தையின் குடும்ப நண்பர் என்ற அடிப்படையில், அவருக்கு ஆதரவாக செயல்பட்டேன். 

ஆனால் கடந்தகாலத்தில் தென்னிலங்கை கட்சிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்த இருவரிடம் தற்போது கட்சியை ஓப்படைப்பதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் முயற்சிக்கிறார். 

அவர்கள் இருவரும் கட்சிக்குள் வருவது எமக்கு பிரச்சினையல்ல. அதனை சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டும்.  இருவரும் தென்னிலங்கை கட்சிகளில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்து பகிரங்கமாக எமது கட்சியில் உறுப்பினராக இணைந்துகொள்ள முடியும். சட்டவிரோதமான நடவடிக்கைகளை செய்து கட்சியை கபளீகரம் செய்யமுடியாது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். 

இது தொடர்பாக நான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகத்திடம் கேள்வியெழுப்பிய போது, கட்சியின் கூட்டங்களில் என்னை பங்கேற்க வேண்டாம் என்றார். 

தமிழர் அரசியலில் எமது கட்சிக்கும் கட்சியின் சின்னத்திற்கும் தற்போது தேவை இருக்கும்போது அதனை கருத்திற்கொள்ளாமல் செயற்படுவதை ஏற்கமுடியாது – என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert