April 27, 2024

ஐ.நாவில் இலங்கைக்கு இம்முறை கிடுக்கிப்பிடி!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார் இலங்கை தொடர்பில் காட்டமாகவே பிரதிபலிக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்துடன் பேச்சுக்களை முன்னெடுப்பதால் எவ்விதமான பயனுமில்லை என்று குறிப்பிட்ட அவர், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதை செயற்பாட்டில் காண்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த தினமன்று ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வாய்மூலமான அறிக்கையைச் சமர்பிக்கவுள்ளதுடன், இதன்போது இலங்கை குறித்த தனது அவதானிப்புக்களையும் வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.