April 27, 2024

மலையக சிறார்களை பாதுகாக்க இ.தொ.கா. விசேட வேலைத்திட்டம்

மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜா சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை பிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டு, இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்த முறைப்பாடுகளை அறிவிக்கவோ, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவோ, பாதுகாப்புக்காகவோ விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தங்களின் ஆலோசனைகளும் முன்வைக்கலாம்.

அந்த தொலைப்பேசி இலக்கங்கள் 0715550666, 0512222422 இந்த இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இதனூடாக 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை வேலைக்கு அமர்த்தவர்களுக்கு எதிராகவும், அச்சுறுத்துக்குள்ளான தொழில்களுக்கு அமர்த்தவதற்கும் அதற்கு சம்மந்தப்பட்ட தரகர்களுக்கு எதிராகவும் இதனூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவதோடு, அரச உயர் சபைகளோடு இந்த நடடிவக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் தோட்ட முகாமைத்துவம் மற்றும் கிராம சேவகரின் ஊடாக அந்தந்த இடங்களில் இருந்து 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் எங்கு வேலைகளுக்கு சென்றுள்ளார்கள் என தகவல்கள் திரட்டப்பட்டு அது குறித்து ஆராயப்படும்.

மேலும் பாடசாலைகளை விட்டு இடை விலகும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி மீள் கற்கை ஆரம்பித்தல் அவர்களுக்கு தேவையான பொருளாதார உதவிகள் வழங்கல் தொண்டமான் தொழில்நுட்ப கல்லூரி ஊடாக இலவச கல்வி வழங்குதல், கண்டி மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் இந்த கல்லூரியின் கிளை காரியாலங்களை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நிறுவுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

வயது குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கவுள்ளார். தொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக இந்த யோசனையை முன்வைக்கவுள்ளார். இது தொடர்பில் புத்திஜீவிகள் அலோசனைகள் வழங்கலாம் என்றார்.