April 26, 2024

தமிழர் தேசத்திற்கு இப்போது தேவையான அரசியல் நகர்வு ?

தமிழர் சமூகத்திற்கு இப்போது எப்படியானதொரு அனுகுமுறை தேவை? இப்படியொரு கேள்வியை கேட்டால் எல்லோருடைய பதிலும் ஒன்றாகவே இருக்கும். அதாவது ஒற்றுமை என்பதே அனைவருடைய பதிலாகவும் இருக்கும். ஆனால் அந்த ஒற்றுமை ஏன் இதுவரையில் சாத்தியப்படவில்லை ? இப்படி கேட்டால் எவரிடமும் தெளிவான பதில் இருக்காது. ஏனெனில் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. எனவே இதுவரை கால அனுபவங்களின் அடிப்படையில் சிந்தித்தால் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்று எண்ணினால், அது கல்லில் நாருரிப்பதற்கு ஒப்பானதாகும். இந்த பின்னணியில் சிந்தித்தால், இனியும் ஒற்றுமை தொடர்பில் பேசிக் கொண்டிருப்பதில் எந்தவொரு பயனும் ஏற்படப் போவதில்லை. ஒரு புதுவிதமான அரசியல் அணுகுமுறை தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.

இன்று தமிழ் அரசியல் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றது. இது போன்றதொரு நிலைமை இதற்கு முன்னர் ஒரு போதுமே ஏற்பட்டதில்லை. முன்னர் பிரச்சினைகள் இருந்தாலும் கூட, ஒப்பீட்டு அடிப்படையில் தமிழ் கட்சிகள் இந்தளவிற்கு பலவீனமடைந்திருக்கவில்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமைத்துவம் தொடர்பான கேள்வி இன்று பரவலாக எழுந்திருக்கின்றது. இரா.சம்பந்தன் மிகவும் தளர்வடைந்திருக்கின்ற நிலையில் (சக்கர நாற்காலியில் பாராளுமன்றம் செல்லும் நிலைமை) தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தில் ஒரு பெரிய வெற்றிடம் தெரிகின்றது. சம்பந்தனுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன? கூட்டமைப்பு அப்படியே தொடருமா அல்லது துண்டுகளாக சிதறுமா? கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மத்திலேயே இதற்கு தெளிவான பதில் இல்லை. அவர்கள் மத்தியில் ஒரு நடுக்கம் தெரிகின்றது. சம்பந்தனுக்கு பின்னர் தங்களால் கூட்டமைப்பாக தொடர முடியுமா என்னும் சந்தேகம் எழுந்திருக்கின்றது.

தமிழரசு கட்சியை பொறுத்தவரையிலும் இரண்டாம் நிலையில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தலைவர் எவரும் இல்லை. இந்த நிலையில் சம்பந்தனுக்கு பின்னரான காலத்தில் தமிழரசு கட்சிக்குள்ளும் முரண்பாடுகளும், உடைவுகளும் ஏற்படலாம். ஆயுத விடுதலைப் போராட்ட இயக்க பின்னணியிலிருந்து ஜனநாயக அரசியலுக்கு திரும்பிய கட்சிகளை பொறுத்தவரையிலும், அவர்களிடமும் பலமான கட்சி கட்டமைப்பு இல்லை. எந்தவொரு இயக்கத்திடமும் இரண்டாம் நிலையில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தலைவர்கள் இல்லை. இந்த விடயங்களை கவனமாக நோக்கும் ஒருவரால், தமிழர் அரசியலின் பலவீனத்தை இலகுவாக புரிந்துகொள்ள முடியும். நிலைமைகளை அவதானிக்கும் போது சம்பந்தனுக்கு பின்னரான காலம் பெருமளவிற்கு தமிழ் கட்சிகள் சிதறிப் போகும் நிலைமையே உருவாகும். இவ்வாறு நான் குறிப்பிடுவதால், சம்பந்தன் ஒரு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினார் என்று நான் வாதிடவில்லை. சம்பந்தனின் அரசியல் பின்னணி, ராஜதந்திர சமூகத்தினர் மத்தியில் அவருக்கு இருந்த அங்கிகாரம், அவரது வயது – இப்படியான சில காரணங்களால், அவரை ஏனையவர்களால் நிராகரிக்க முடியவில்லை. இதன் காரணமாகவே சம்பந்தனால் இப்போதும் தலைவராக இருக்க முடிகின்றது. மற்றும்படி சம்பந்தன் தனக்கு கிடைத்த அரிய சந்தர்பங்களை தவறவிட்ட ஒரு அரசியல்வாதிதான். அதில் இந்தக் கட்டுரை முரண்படவில்லை. ஆனால் இப்போது விடயம் சம்பந்தன் பற்றியதல்ல.

இன்று தமிழ் அரசியல் சூழலில் பல்வேறு விடயங்கள் பேசப்படுகின்றன. சீனா – இந்தியா – அமெரிக்கா என்றெல்லாம் பேசப்படுகின்றது. சீனா வடக்கில் புகுந்துவிட்டதாக பலரும் பேசுகின்றனர். இவற்றை ஒரு புறமாக வைப்போம். ஒரு வேளை சிலர் சொல்லுவது போன்று, இவ்வாறான பலம் பொருந்திய நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியினால், தமிழர்களுக்கும் சில வாய்ப்புக்கள் வருவதாகவே வைத்துக் கொள்வோம் – ஆனால் இந்த இடத்தில் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி – அவற்றை கையாளுவதற்கான ராஜதந்திர ஆட்டத்தில் ஈடுபடுவதற்கான அரசியல் இயலுமை தமிழர்களிடம் இருக்கின்றதா? அதற்கான ஒரு பலமான அரசியல் தலைமைத்துவம் தமிழர்களிடம் இருக்கின்றதா? ஏன் இது பற்றி எவரும் சிந்திக்கவில்லை? ஏனெனில் ஒரு பலமான அல்லது, வெளித் தரப்புக்கள் கருத்தில் கொள்ளக் கூடிய தலைவமைத்தும் இல்லாத போது, எவருக்குமே நாங்கள் தேவைப்படப் போவதில்லை. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்கும் ஒவ்வொருவரும் இதனை சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

இந்த கட்டுரை முன்வைக்கும் விடயம் தொடர்பில் எவருக்குமே முரண்பாடுகள் இருக்காது எனலாம். ஏனெனில் இதுதான் இன்றைய நிலைமை. நிலைமை இதுதான் என்றால், இதனை எப்படி மாற்றியமைப்பது? என்ன செய்தால் இன்றைய நிலைமை ஒரளவாவது எதிர்கொள்ளலாம். ஏனெனில் நிச்சயமாக தற்போதைய சூழலில், ஒரு பலமான அரசியல் தலைமைத்துவத்தை ஏற்படுத்தவே முடியாது. அவ்வாறான கற்பனைகளில் இருப்போர் முதலில் அதனை கைவிட்டுவிட வேண்டும். ஒப்பீட்டடிப்படையில், மற்றவர்களால் திருப்பிப் பார்க்க கூடிய ஒரு அரசியல் கட்டமைப்பை எவ்வாறு உருவாக்கலாம்? அதற்கு என்ன செய்யலாம்? என்பது பற்றியே அனைத்து தரப்பினரும் சிந்திக்க வேண்டும்.

கடந்த காலத்தில் தமிழ் தேசிய அடிப்படையில் செயற்படும் கட்சிகளை ஒன்றுபடுத்தும் பல்வேறு முயற்சிகள், மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனாலும் எந்தவொரு முயற்சியும் வெற்றியை காணவில்லை. இதற்கு தேர்தல் அரசியலே பிரதான காரணமாகும். ஏனெனில் கட்சிகள் என்றாலே தேர்தல்தான். தேர்தல் நலன் இல்லாமல் எந்தவொரு கட்சியும் இருக்க முடியாது. எனவே ஒவ்வொரு கட்சியும், அதன் தேர்தல் நலனின் அடிப்படையில்தான் விடயங்களை அணுக முற்படுகின்றன. தங்களின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் விடயங்களை எந்தவொரு கட்சியும் முன்னெடுக்கப் போவதில்லை. கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தமைக்கு இதுவே காரணமாகும். இதனை மறைப்பதற்கு சிலரோ கொள்கை என்னும் நிறத்தை பூசிக் கொள்கின்றனர். அந்த நிறத்தை கடந்து சென்று பார்ப்போமானால், அங்கும் தங்களுடைய கட்சி என்னும் விம்பமே மேலோங்கியிருப்பதை காணலாம். இந்த நிலைமையை நாம் எவ்வாறு கடந்து, செல்வது?

இந்த கட்டுரை சில விடயங்களை பரிந்துரை செய்கின்றது. இங்கு கூறப்படும் எவையும் முடிந்த முடிபுகளல்ல. இது ஒரு உரையாடலுக்கான ஆரம்பம் மட்டுமே! பல கோணங்களில் இது தொடர்பில் உரையாடினால் ஒரு பாதையை நாம் கண்டடைய முடியும்.

இன்று தமிழர் தேசத்திற்கு தேவை ஒரு தேசிய இக்கமாகும். வெறுமனே கட்சிகளின் கூட்டுக்களை ஏற்படுத்துவதால், எந்தவொரு பயனும் இல்லை. தேர்தலை இலக்காக கொண்டு உருவாக்கப்படும் இவ்வாறான கூட்டுக்கள், தேர்தல் முடிந்ததும் சிதறிவிடுகின்றன. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமாயின் கலப்பு அரசியல் கட்டமைப்பு தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். இந்த கட்டுரை பரிந்துரைக்கும் தேசிய இயக்கமானது, தேசிய நலனை கருத்தில்கொண்டு, தேர்தல் அரசியலிலிலும் தலையீடு செய்யும் அதே வேளை, ஒரு அரசியல் இயக்கமாகவும் தொழிற்பட வேண்டும்.

ஏனெனில் இன்றைய சூழலில் தமிழ் மக்களின் ஜனநாயக பலத்தை தீர்மானிப்பதில் தேர்தல் அரசியல் முக்கியமானது. மக்களின் பிரதிநிதிகளாக ஆளுமையுள்ள இளம் தலைவர்களை வெளிக்கொண்டு வரவேண்டியது கட்டாயமான ஒன்றாகும். அதற்கு தேர்தல் அரசியல் முக்கியமானது. அதே வேளை இவ்வாறானதொரு தேசிய இயக்கம் ஒரு கொள்கை நிலைப்பாட்டை கொண்டிருக்க முடியும் ஆனால் அதனை ஒரு கருங்கற் பாறையாக கருதக் கூடாது. உனடி மற்றும் நீண்ட கால அடிப்படையில் விடயங்களை கையாளும் அரசியல் ஒழுக்கத்தை அது கொண்டிருக்க வேண்டும். இன்றைய சூழலில் எது முதன்மையான பிரச்சினையோ அதனையே குறித்த தேசிய இயக்கம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் எந்த விடயங்களையும் பேசலாம் ஆனால் முதலில் இருப்பதை பாதுகாக்க வேண்டும். இன்றைய சூழலில் மாகாண சபையை உச்சளவில் பயன்படுத்திக் கொண்டு, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவதற்காக அனைத்து தரப்பினரும் ஓரணியில் நிற்கவேண்டும். புதுடில்லிக்கும் தமிழர்களுக்குமான அரசியல் உரையாடலின் மையம் 13வது திருத்தச்சட்டம்தான். அதனை தவிர்த்து புதுடில்லியை ஒரு போதுமே அணுகமுடியாது.

இவ்வாறான ஒரு தேசிய அரசியல் இயக்கம் தொடர்பில் சிந்திக்கும் போது எவரையும் புறக்கணிக்க வேண்டியதில்லை. எவரையும் புறக்கணிக்கும் தகுதி எவருக்கும் இல்லை. துரோகி, தியாகி, இந்தியாவின் ஆள், கொழும்பின் ஆள் – இந்த சொற்களுக்கு இப்போது தமிழர் அரசியலில் எந்தவொரு பெறுமதியும் இல்லை. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை ஏற்றுக் கொள்ளும் அனைவருமே தகுதியுடையவர்கள்தான். இவ்வாறானதொரு தேசிய இயக்கம் தொடர்பில் சிந்திக்க வேண்டிய கடப்பாடு முன்னாள் விடுதலை இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கே அதிகம் உண்டு. ஏனெனில் அவர்கள் தங்களின் வாழ்வை இந்த அரசியலுக்காக கொடுக்க முன்வந்தவர்கள். தங்களது இளமை காலம் முழுவதையும் இதற்குள் செலவழித்தவர்கள். கடந்த காலம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் அவற்றை தூக்கி பிடிப்பதால் தமிழர் அரசியலின் என்ன மாற்றம் ஏற்படும்?

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுத இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்புடன் முரண்பட்டு வெளியில் நிற்கும் இயக்க தலைவர்கள் அனைவரும் இது தொடர்பில் சிந்திக்க முன்வர வேண்டும். இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரு வரலாற்று பொறுப்புண்டு. ஏனெனில் இன்று தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கு கடந்த காலத்தில் தமிழர் அரசியலை வழிநடத்தியவர்கள்தான் பொறுப்பு. கடந்தகாலத்தின் தவறுகளை சரிசெய்ய வேண்டிய வரலாற்று பொறுப்பு முன்னாள் இயக்கங்களுக்கு உண்டு. பொறுப்புக்கள் அனைத்தையும் சிலரின் மீது போட்டுவிட்டு மற்றவர்கள் ஒதுங்கிக்கொள்ள முடியாது. அந்த வகையில் இன்றைய சூழலை சரிசெய்ய வேண்டிய வரலாற்று பொறுப்பு, முன்னாள் இயக்க தலைவர்களான சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு உண்டு. முதலில் இவர்கள் தங்களுக்குள் உரையாட வேண்டும். ஒரு பொது வேலைத்திட்டத்தி;ன் கீழ் எவ்வாறு ஒன்றிணைவது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். தங்களுக்கு தாங்களே ஒரு அரசியல் ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால் இவர்கள் சுயாதீனமாக இவ்வாறான ஒரு ஒழுங்கிற்குள் வரப் போவதில்லை. வரவும் முடியாது. இந்த இடத்தில்தான், தமிழ்த் தேசிய அரசியலை பாதுகாப்பது தொடர்பில் சிந்தித்துவரும் புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள், சிவில் சமூகத் தலைவர்கள் ஆகியோரின் தலையீடு அவசியப்படுகின்றது. அரசியல் சிந்தனையாளர்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும், கட்சிகளின் தலைவர்களும் ஒரு நேர்கோட்டில் பயணிக்கும் போதுதான் அது ஒரு தேசிய இயக்கம் என்னும் தகுதியை பெறும். அவ்வாறில்லாது வெறுமனே கட்சிகள் சிலர் கூடி தேர்தலில் போட்டியிடுவதால், தேசிய இயக்கம் என்னும் தகுதியை பெற முடியாது. மேலும் இவ்வாறான ஒரு முயற்சியை மேற்கொள்ளும் போது அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உள்வாங்கப்பட வேண்டும். அவர்களின் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கு அனைவரும் சமத்துவமாக நடத்தபாடாமையும் ஒரு காரணமாகும்.

கொள்கை சார்ந்த விடயங்கள், களநிலைமைகள் தொடர்பான பரிசீலனை, லொபி என்பவற்றை கையாள்வதற்கு தனியான குழுக்கள் இருக்க வேண்டும். ஒன்றை ஒன்று மேவும் நிலைமை இருக்கக் கூடாது. இவை அனைத்தையும் உள்ளடக்கியவாறு தற்காலிக உயர் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் பயணித்தால் நிச்சயம் இந்த கட்டுரை குறிப்பிடும் தேசிய அரசியல் இயக்கமொன்று பரிணமிக்கும். ஆனால் இது எழுதுவது போன்று இலகுவான விடயமல்ல என்பது உண்மை. தமிழ் சூழலில் இயங்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள், அரசியல் சிந்தனையாளர்கள், கருத்துருவாக்கிகள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் இது தொடர்பான உiராயடல் ஒன்று இடம்பெற வேண்டும் என்பதற்கான ஒரு முதல் படியே, இந்த கட்டுரை.