Oktober 15, 2024

தெல்லிப்பழை:புற்றுநோய் வைத்தியசாலையிலும் மோசடி?

தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் தமக்கு மேலதிக நேரப்படி உரியவகையில் தரப்படவில்லையென நோயாளிகளை அலைக்கழித்த கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் கும்பல் அரங்கேற்றிய மில்லியன் கணக்கிலான மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது.

முன்னதாக கடந்த காலத்தில் நடைபவனி மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தில் வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட ஒரே ஒரு புற்று நோய் பிரிவை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் வரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையுடன் புற்றுநோய் சிகிச்சை பிரிவு தற்போது இயங்கி வருகிறது. அதற்கான செலவீனங்கள் அதிகம் என்பதால் மத்திய அரசின் கீழ் வரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்துடன் புற்றுநோய் சிகிச்சை பிரிவை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல வசதிகளைக் கொண்ட மாபெரும் வைத்தியசாலையாக வளர்ந்து வரும் புற்றுநோய் வைத்தியசாலையை, தற்போதைய நிலையில் நோயாளர்கள் வழமை போன்று தமது சிகிச்சையினை பெற்றுக் கொள்கின்றனர். இதனை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லும்போது பல இடர்பாடுகளை, நிர்வாக சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என எச்சரிக்கப்பட்டும் வந்தது.

இத்தகைய பின்னணியில் தமக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் உரியவகையில் வழங்கப்படுவதில்லையென தெரிவித்து கதிரியக்க கருவி இயக்குநர்கள் பத்துப்பேர் சேவைகளை புறக்கணித்து வந்தனர்.

இதனால் உயிருடன் போராடும் புற்று நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.ஆயினும் அவர்களது அவலங்கள் கண்டுகொள்ளப்படவில்லை.

இந்நிலையிலேயே இவ்வாண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் கடமை நேரங்கள் அளித்த சிகிச்சையினை விடுமுறை நாளில் அளித்ததான போலி ஆவணங்கள் சகிதம் சுமார் இரண்டு மில்லியன் வரை சுருட்டியமை அம்பலத்திற்கு வந்துள்ளது.

இதனை அரச கணக்காய்வு பிரிவு கண்டறிந்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையினை சேர்ந்த இக்கும்பல் மாதாந்தம் தமது சம்பளத்திற்கு மேலாக கொடுப்பனவென இலட்சக்கணக்கில் கொடுப்பனவுகளை பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது.