பாடசாலைக்குள் துப்பாக்கிச்சூடு ; 8 சிறுவர்கள் பலி ..!

மத்திய ஆப்பிரிக்க நாடான மத்திய கேமரூனில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது எட்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கேமரூனின், கும்பா நகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக மேலும் பலரும் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் கேமரூனில் ஆங்கிலம் பேசும் மேற்கில் அம்பாசோனியா என்று அழைக்கப்படும் பிரிந்து செல்லும் அரசை உருவாக்க முயற்சிக்கும் இராணுவத்திற்கும் குழுக்களுக்கும் இடையில் நடந்து வரும் போராட்டத்துடன் இந்த தாக்குதல் தொடர்புபட்டதா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

அத்தோடு இத் தாக்குதலில் எட்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 12 பேர் காயமடைந்து உள்ளூர் வைத்தியசாலைகளுக்கு சிகிக்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் மனித நேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில குழந்தைகள் அச்சம் காரணமாக பாடசாலையின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து காயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.