ஐரோப்பாவில் நேர மாற்றம் .( 25.10.2020)

ஐரோப்பாவில் ஏன் நேரம் மாற்றப்படுகிறது. ?
புவி மேற்பரப்பில் காலநிலை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இலங்கை, இந்தியா மற்றும் அதன் அயல்நாட்டுப் பகுதிகள் மத்திய கோட்டுக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் ஆண்டு முழுவதும் சராசரி வெப்பநிலையை அனுபவிக்கின்றன. இதனால் அதிகமான சூரிய ஒளி, வெப்பம் கிடைக்கின்றன.
ஐரோப்பா போன்ற வடமுனைவை அண்மித்த நாடுகளில் காலநிலை தெளிவான வேறுபாட்டைக் கொண்டுள்ளன. ஒக்டோபர் மாதம் முதல் பெப்பரவரி மாதம் வரை மிக அதிகமான பனிப்பொழிவையும் குளிர்கால நிலையையைக் கொண்டிருப்பதோடு இரவுக் காலம் அதிகமாகக் காணப்படும். உதாரணமாக பிற்பகல் 4 மணிக்கு இரவாகி காலை 8 மணியளவில் விடியும் நிலை காணப்படும். இது நீண்ட இரவை இப்பகுதிகள் அனுபவிக்கக் காரணமாக அமைந்து விடுகின்றன. அல்லது பகற்காலம் மிகக் குறுகியதாக காணப்படுவதை அவதானிக்கலாம்.
இரவுக் காலம் அதிகமாகக் காணப்படுவதால் எரிபொருட்களை மிச்சப்படுத்துவதற்காக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த நேர மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐரோப்பாவில் இன்று குளிர்கால நேர மாற்றத்திற்காக ( 25 .10.2020) ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்தப்பட்டு 2 மணியாக்கப்பட்டுள்ளது.
(ஒக்டோபர் மாதத்தில் வரும் இறுதி ஞாயிறு நாளன்று குளிர்கால நேரம் மாற்றம் இடம்பெறும்.) இதனால் ஐரோப்பாவுக்கும் இலங்கைக்கு மான நேர மாற்றம் 1 மணி நேரத்தால் அதிகரிக்கிறது தற்போது மூன்றரை மணிகளாக இருந்த நேர வித்தியாசம் இன்றில் இருந்து நான்கரைமணிகளாக இருக்கும் .இந்த நிலை அடுத்த கோடை காலம் வரை நீடிக்கும்.ஐரோப்பாவைத் தவிர, அமெரிக்கா, கனடாவிலும் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப் படுகின்றது. இந்த நேர மாற்றத்தை Daylight Saving Time .என்று குறிப்பிடுவர்.
எவ்வாறு எரிசக்தியை மிச்சப்படுத்தலாம். ?
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரும்பாலன வீடுகளுக்கு மின்சாரம் இருக்கவில்லை. அதனால் குளிர் காயவும் , ஒளியேற்றவும் அதிகளவில் காட்டுமரங்களை வெட்டி எடுத்தார்கள். மேலும் வீட்டிலும் வீதிகளிலும் விளக்கேற்ற எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தினர். மேலும் அதிகளவில் மெழுகுவர்த்தியும் பயன்படுத்தப்பட்டது .இவ்வாறன எரிபொருட்களை மீதப்படுத்த நேர மாற்றம் அவசியம் என உணர்ந்தனர். மக்கள் பகற் காலத்தில் தங்கள் வேலைகளை நிறைவு செய்து விட்டு இரவுக் காலத்தில் உறங்கும் நிலைக்கு சென்றால் எரிபொருள் குறைக்கப்படலாம் என்பது உண்மையாயினும் தற்காலத்தில் மின்சாரம் அதிகளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளமையால் நேர மாற்றம் அவசியம் அற்றது என்ற கருத்து மேலோங்கி வருகிறது .