September 13, 2024

பேச்சுவார்த்தை தோல்வி அடையுமானால் சீனாவுடன் போருக்கு இந்திய ராணுவம் தயார் – முப்படைகளின் இராணுவ தளபதி

பேச்சுவார்த்தை தோல்வி அடையுமானால் சீனாவுடன் போருக்கு இந்திய ராணுவம் தயார் - முப்படைகளின் இராணுவ தளபதி

பேச்சுவார்த்தை தோல்வி அடையுமானால் சீனாவுடன் போருக்கு தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.  

முப்படைகளின் ராணுவத் தளபதி பிபின் ராவத் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் லடாக்கில் உள்ள எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்திற்கு இடையே கடந்த ஜூன் 15ம் தேதி நடந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பில் 35 பேர்  உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. எனினும், இதனை சீனா உறுதிப்படுத்தவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து, லடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், இரு நாட்டு அரசுகளும் முயற்சிகளை மேற்கொண்டன. தூதரக ரீதியிலும், ராணுவ ரீதியிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

இருப்பினும், இந்த பேச்சுவார்த்தையில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. லடாக் எல்லையில் உள்ள சீன ராணுவம், தனது முந்தைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதனை சீனா ஏற்க மறுத்து வருகிறது. அதேநேரத்தில், எல்லையில் உள்ள பாங்காங் ஏரியில் இருந்து இந்திய ராணுவம் பின்வாங்க வேண்டும் என்று சீன தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், சீனா எல்லையில் தனது ராணுவத்தை குவித்து வருகிறது. இந்தியாவும், பதிலுக்கு தனது ராணுவத்தை குவித்து வருகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட நினைப்பவர்களுக்கு உரிய பாடம் புகட்டப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி எச்சரித்திருந்தார். சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண ராணுவ நடவடிக்கை உள்பட அனைத்து வாய்ப்புகளையும் அரசு பயன்படுத்தும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சீனாவுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடையுமானால், அந்நாட்டுடன் போர் புரிய இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். லடாக் எல்லையில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையும், தளவாடங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், பிபின் ராவத்தின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.