டக்ளஸ் – அங்கயன் யாருக்கு அதிகாரம் ? தொடங்கியது போட்டி!
எதிர்பார்க்கப்பட்டது போன்று யாழ்ப்பாணத்தில் யாருக்கு அதிகாரமென்பதில் அங்கயன் டக்ளஸிடையே மோதல் உச்சம் பெற்றுள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகிய நான் தான் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடபகுதி தொடர்பில் பேசக்கூடிய வராக இருப்பதோடு, அதனூடாக வடக்கின் அபிவிருத்தி திட்டங்களை முடிந்த வகையில் செயல்படுத்துவேன் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துத் திட்டங்களையும் மக்களுக்கு பயன் அடையக்கூடிய திட்டங்களாக செயல்படுத்துவதோடு குறித்த திட்டங்களை நான் செயல்படுத்துவதை யாரும் தடுக்கவும் முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரான தனது அதிகாரத்தை நிலை நிறுத்த அங்கயன் முழு அளவில் முற்பட்டுள்ளார்.
இதற்கேதுவாக யாழில் தனது அனுமதியின்றி எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் முன்னெடுக்கவேண்டாமென அங்கயன் மாவட்ட செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் தனது அலுவலகத்தை ஸ்தாபிக்க மூன்று அறைகளை மாவட்ட செயலகத்தில் ஒதுக்கி வழங்கவும் அவர் கோரியுள்ளார்.
ஆயினும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக தானே இருப்பதாக டக்ளஸ் கூறி வருகின்ற போதும் மீன்பிடி தாண்டியதாக எந்தவொரு திணைக்கள கட்டுப்பாடும் டக்ளஸ் வசமில்லையென்பது குறிப்பிடத்தக்கது.