September 10, 2024

முதல் உரையிலேயே தாயின் உண்மைகளை பகிரந்த கமலா ஹாரிஸ்

 

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸ் தனது முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்துள்ளார்.சென்னையைச் சேர்ந்த சியாமளா கோபாலனின் மகள் கமலா ஹாரிஸ் , துணை அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்டது உலக நாடுகள் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில், நேற்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பிடன், டெலவர் மாகாணத்தில் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

இந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்ட கமலா ஹாரில், தனது முதல் உரையில், தாய் சியாமளா கோபாலனை நினைவு கூர்ந்துள்ளார். தனது தாயைப் பற்றி கமலா ஹாரிஸ் பேசுகையில், “ என் அப்பாவும், அம்மாவும் உலகின் எதிர் எதிர் பக்கங்களிலிருந்து வந்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஒருவர் இந்தியாவிலிருந்தும், ஒருவர் ஜமைக்காவிலிருந்தும் உலகத் தரம் வாய்ந்த கல்வியைத் தேடி அமெரிக்காவுக்கு வந்தனர். 1960ல் தொடங்கப்பட்ட சிவில் உரிமைகள் இயக்கமே அவர்களை ஒன்றிணைத்தது.

கலிபோர்னியா, ஓக்லாந்தில் தெருக்களில் இருவரும் மாணவ பருவத்திலேயே, நீதிக்கான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு குரல் எழுப்பினர். இந்த போராட்டங்களில் நானும் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். அம்மாவும், அப்பாவும் என்னையும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். என்னை, ஒரு இழுபெட்டியில் இருக்கமாகக் கட்டி இழுத்துச் செல்வார்கள்.

என்னையும் எனது சகோதரி மாயாவையும், ‘ஒவ்வொரு அமெரிக்கத் தலைமுறையும் இந்த பேரணியைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்’ என்ற நம்பிக்கையில் அம்மா வளர்த்திருக்கிறார். ஏதேனும் பிரச்சினை வரும் போது, உட்கார்ந்து அதைப் பற்றி குற்றம் சொல்லாமல், அதிலிருந்து மீண்டு வர ஏதாவது செய்ய வேண்டும்’ என்று அம்மா சொல்லுவார். அதை நானும் பின்பற்றியிருக்கிறேன்.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின், ‘சட்டத்தின் கீழ் சம நீதி’ என்ற செதுக்கப்பட்ட சொற்களை உண்மையானதாக மாற்ற என் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஜோ பிடன், கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்தார். கமலா துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம்களும், சீக்கியர்களும், தென் இந்தியாவைச் சேர்ந்தவர்களும் ஜனநாயக கட்சிக்கு அதிகளவு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் நிதி சேர்ப்பு கூட்டத்தில் கமலா ஹாரிஸ் கலந்து கொண்ட நிலையில், முதன் முறையாக ஜோ பிடனுக்கு ஒரேநாளில் 2.60 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி குவிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபோன்று, இந்த தேர்தல் முடிவுகள் ஜோ பிடனுக்கு சாதகமாகவே இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

-கவிபிரியா