September 13, 2024

சுமந்திரனின் புலிநீக்கம்:ஆராய குழு?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் தோல்வி தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.மாவை தரப்பின் முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகின்றது.

சுமந்திரன் தரப்பின் புலிநீக்க அரசியலே இதற்கு காரணமென கூட்டமைப்பின் பெரும்பான்மை தரப்பு குற்றஞ்சுமத்தி வரும் நிலையில் குழு நியமனம் சுமந்திரன் -சிறீதரன் கூட்டை குழப்பலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குழுவில் யார் உள்ளடங்கவுள்ளனரென தீர்மானிக்கப்படாத போதும் சுயாதீன தரப்புக்களே உள்ளடங்கலாமென தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்ட முறை தவறானது என்பதை இலங்க தமிழ் அரசு கட்சியின் அரசியல் செயற்குழு கொள்கையளவில் ஏற்றுக்கொண்டது. இதனால், இந்த விவகாரத்தை வரும் 29ஆம் திகதி வவுனியாவில் நடக்கும் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இந்த விவகாரத்தை ஆராய்ந்து, நடவடிக்கையெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அசியல் செயற்குழு இன்று திருகோணமலையில் கூடியது.

இதன்போது, தமிழ் அரசு கட்சியின் ஒரு குழுவினரால் தேசியப்பட்டியல் ஆசனம் இரகசியமான முறையில் பெறப்பட்டது குறித்து ஆராயப்பட்டது.

அம்பாறைக்கு- த.கலையரசனிற்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டது குறித்து யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அது வழங்கப்பட்ட முறை தவறானது என பலரும் சுட்டிக்காட்டினர். கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, பங்காளிக்கட்சிகளிற்கு தெரியாமல்- திருட்டுத்தனமாக- இது நடந்துள்ளது என்பதை பலரும் சுட்டிக்காட்டினர். மாவை சேனாதிராசா, கே.வி.தவராஜா, குலநாயகம் என பலரும் இதை சுட்டிக்காட்டினர்.

இதன் தொடர்ச்சியாக கூட்டமைப்பின் கட்சிகள் சம்பந்தப்படாத சுயாதீன குழுவொன்றை நியமித்து தோல்விக்கான காரணத்தை ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டது. அந்த குழுவை எதிர்வரும் மத்தியகுழுவில் பிரேரிக்க தீர்மானிக்கப்பட்டது.