சீனாவும் பதிலடி! அமெரிக்க தலைவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக விரிசலடைந்து வருகின்றது. சீனாவின் ஆளுகைக்குட்பட்ட ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருந்ததுடன் ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் உள்பட சீனா மற்றும் ஹாங்காங் அதிகாரிகள் 11 பேர் மீது அமெரிக்கா கடந்த வாரம் பொருளாதார தடை விதித்தது.

இந்த நடவடிக்கையை கண்டித்து ஹாங்காங் அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. வெளிநாட்டு அரசாங்கங்கள் விதித்த ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகள் ஹாங்காங்கில் சட்டபூர்வமான அந்தஸ்து இல்லை என்று எச்.கே.எம்.ஏ (ஹாங்காங் நாணய ஆணையம்) கூறியுள்ளது.

அமெரிக்காவின் செயலுக்குப் பதிலடியாக சீனாவும் 11 அமெரிக்க அரசியல் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட 11 பேரில் 6 அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களும் 5 அமெரிக்கப் பிரசைகளும் அடங்குவர். தடை விதிக்கப்பட்ட 11 பேரும் ஹாங்காங் தொடர்பான பிரச்சினையில் மோசமாக செயல்பட்டவர்கள் என சீனா குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க செனட்டர்கள் மார்கோ ரூபியோ, டெட் க்ரூஸ், பாட் டூமி, ஜோஷ் ஹவ்லி, டாம் காட்டன் மற்றும் காங்கிரஸ்காரர் கிறிஸ் ஸ்மித் ஆகியோருக்கு எதிராக பரஸ்பரம் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

மார்கோ ரூபியோ, டெட் குரூஸ் ஆகிய இருவரும் சீனாவுக்குள் நுழைவதற்கு அந்த நாடு ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் ஹாங்காங்கில் இருந்து வெளிவரும் ரைபூன் பத்திரிகையின் அதிபர் உட்பட்ட 6 புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.