September 9, 2024

சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு அனுப்பப்படும் மர்ம பார்சல்..!!

சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு அனுப்பப்படும் மர்ம பார்சல்..!!

முதலில் சீனாவிலிருந்து வெளியானதாக கருதப்படும் கொரோனா உலகையே பதறச்செய்துள்ள நிலையில், சீனாவிலிருந்து உலகமெங்கும் அனுப்பப்படும் மர்ம பார்சல்களிலுள்ள விதைகளைப் பார்க்கும்போது, மனிதர்களைத் தொடர்ந்து உணவுப்பயிர்கள் முதலான இயற்கை வளத்தை அழிக்க சீனா முடிவு செய்துள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து கடந்த சில நாட்களாக, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு மர்ம பார்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

உள்ளே நகைகள் இருக்கிறது என குறிப்பிடப்பட்டு தபாலில் வரும் அந்த பார்சல்களைப் பிரித்துப் பார்த்தால், அவற்றில் நகைகள் இல்லை, அதற்கு பதில் பல தாவரங்களின் விதைகள் உள்ளன.

கடுகு, முட்டைகோஸ், செம்பருத்தி, ரோஜா, புதினா முதலான 14 தாவரங்களின் விதைகள் இப்படி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த விதைகளைக் குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர் அமெரிக்க வேளாண்மைத்துறை அதிகாரிகள்.

Invasive species என்று கூறப்படும், புதிதாக நுழையும் இந்த தாவரங்கள், சுற்றுச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தி, இயற்கையாக இருக்கும் தாவரங்கள் மற்றும் பூச்சிகளின் இடத்தை பிடித்துக்கொள்வதோடு, அவற்றிற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் அல்லது அவற்றை முற்றிலும் அழித்துவிடும் என்ற பயங்கர விடயத்தை தெரிவித்துள்ளார்கள் அவர்கள்.

உதாரணத்திற்கு, முன்பு பிரித்தானியாவுக்குள் நுழைந்த Japanese knotweed என்ற தாவரத்தைக் கூறலாம். இந்த தாவரம், காங்கிரீட் அஸ்திபாரம், கட்டிடங்கள், வெள்ளத்தை தடுப்பதற்காக கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள், சாலைகள் முதலான இடங்களில் முளைத்து அந்த இடங்களை சேதப்படுத்திவிடக்கூடியதாகும்.

அதேபோல், சாம்பல் அணில்கள் என்னும் விலங்குகளையும் கூறலாம், இவை பிரித்தானியாவுக்குள் நுழைந்து பிரித்தானியாவில் காணப்படும் சிவப்பு அணில்களை காணாமல் போகச் செய்துவிட்டனவாம்.

இதற்கிடையில், டெக்சாஸ் வேளாண்மைத்துறை அதிகாரியான Commissioner Sid Miller, இந்த விதைகள் ஏதேனும் கிருமிகளைக்கூட கொண்டிருக்கலாம், ஏதாவது பாக்டீரியம், வைரஸ் போன்ற நுழையும் கிருமிகளாக அவை இருக்கலாம் என்று எச்சரிக்கிறார்.

ஆகவே, மக்கள் இத்தகைய விதைகளை தபாலில் பெறும்போது, அவற்றை விதைக்கவேண்டாம் என்றும், அது குறித்து வேளாண்மைத்துறைக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இன்னொரு பக்கம், இது ’brushing scam’ என்னும் மோசடியாகவும் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அதாவது சில நிறுவனங்கள் தங்கள் பொருட்கள் நன்றாக விற்பனையாகின்றன என்ற போலியான தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக இப்படி தங்கள் நிறுவன பெயரில் போலியாக சில பொருட்களை அனுப்புமாம்.

அந்த நிறுவனத்தின் பெயரில் அதிக பார்சல்கள் அனுப்பப்படும்போது, அந்த நிறுவனத்தின் பொருட்கள் பரபரப்பான விற்பனை செய்யப்படுவதான போலியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும், அதை நம்பி மக்கள் ஏமாறவும் வாய்ப்புள்ளது.

இதுவும் அதுபோன்ற ஒரு மோசடியாகவும் இருக்கலாம் என்கின்றனர் லோவா வேளாண்மைத்துறை அதிகாரிகள்.

இதற்கிடையில், சீன வெளியுறவு அமைச்சகத்தைச் சார்ந்த Wang Wenbin என்பவர், சீனாவிலிருந்து எந்த விதைகளையும் தபாலில் அனுப்ப கடும் கட்டுப்பாடுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த பார்சல்களிலுள்ள முகவரிகளை சோதித்தபோது, அவை போலியான முகவரிகள் என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.